தமிழ்ல இதுதான் பர்ஸ்ட்டாமே.. நயன்தாரா வெளியிடும் 'கூழாங்கல்' படத்துக்கு சர்வதேச விருது!
சென்னை: நயன்தாரா வெளியிட இருக்கும், கூழாங்கல் படம், ரோட்டர்டாம் சர்வதேசப் பட விழாவில் விருது பெற்றுள்ளது.
அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், கூழாங்கல்.
குடிகார அப்பாவுக்கும் மகனுக்குமான கதையை ரத்தமும் சதையுமாக சொல்லும் படம் இது.

நடிகை நயன்தாரா
இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இதன் வெளியீட்டு உரிமையை, தனது ரவுடி பிக்சர்ஸ் மூலம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வாங்கியுள்ளனர். 'கூழாங்கல் வினோத்ராஜின் முதல் படம் என்றாலும் தலைப்பை போலவே எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது' என்று இருவரும் கூறியிருந்தனர்.

ரோட்டர்டாம் பட விழா
இந்நிலையில், நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், டைகர் பிரிவில் போட்டியிட இந்தப் படம் தேர்வானது. இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து படக்குழுவுடன் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் அங்கு சென்றனர்.

வேஷ்டி, புடவை
பட விழாவில், படக்குழுவுடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வேஷ்டி, புடவையில் கலந்துகொண்டனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்தப் படம் கடந்த வியாழக்கிழமை அன்று அங்கு திரையிடப்பட்டது. இதையடுத்து படத்தை பார்த்தவர்கள், படக்குழுவினரை பாராட்டினர்.

முதல் தமிழ்ப் படம்
இந்நிலையில், இந்தப் படத்துக்கு விருது கிடைத்துள்ளது. இதையடுத்து இயக்குனர் வினோத் ராஜ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ரோட்டர்டாம் சர்வதேச பட விழாவில் விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு சனல்குமார் சசிதரன் இயக்கிய செக்ஸி துர்கா என்ற மலையாளப் படத்துக்கு இந்த விழாவில் விருது கிடைத்திருந்தது.

முதல் வெளியீடு
இந்த விருது பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறும்போது, 'டைகர் விருதை வென்ற முதல் தமிழ்ப் படம் இது. இயக்குனர் வினோத்ராஜின் கடின உழைப்புக்கு இந்த மரியாதை கிடைத்துள்ளது. எங்கள் ரவுடி பிக்சர்ஸின் முதல் வெளியீடு இந்தப் படம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். வினோத்ராஜ் மற்றும் அவர் டீமுக்கு நன்றி. பல ஊர்ல இருக்கிறவங்களை ஓட விட்டுட்டாப்ல' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











