இதான் இங்க நடக்குது.. தங்கலான், கொட்டுக்காளி, வாழை படங்களிலேயே பாரபட்சம்.. நடிகை முல்லை பகீர்!
சென்னை: பாதிக்கப்படும் பெண்களின் நிலையை எடுத்துப் பேசிய கொட்டுக்காளி படத்தில் நடித்த நடிகையே பாதிக்கப்பட்டு பேசியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொட்டுக்காளி படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் நடித்த நடிகை முல்லை யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது மனக்குமுறல்களை வெளிப்படையாக கொட்டித் தீர்த்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்த கொட்டுக்காளி படம் சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது.

ஆனால், தமிழ்நாட்டில் வாழை படத்துக்கு போட்டியாக வெளியான அந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், பாக்ஸ் ஆபிஸில் பெரிதும் ஷைன் ஆகவில்லை.
கொட்டுக்காளி நடிகை முல்லை: கொட்டுக்காளி படத்தில் கடைசியாக கிளைமேக்ஸில் அதுவரை பேய் பிடித்தவர் என சொலல்ப்பட்ட ஹீரோயின் அன்ன பென்னை வைத்து அந்த பூசாரி மருந்து எடுக்கும் விஷயத்தை செய்யாமல் இன்னொரு பெண்ணுக்கு செய்யும் காட்சிகளை தான் வினோத்ராஜ் காட்டியிருப்பார். அந்த பெண்ணாக நடித்த முல்லை தான் தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். செம்பி, ப்ளூ ஸ்டார், கன்னூர் ஸ்குவாட் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
யாருமே கண்டுக்கல: படத்தில் முக்கிய காட்சியில் செம போல்டாக நடித்த முல்லையை யாருமே கண்டுக்கவில்லை என்றும் பெரிதாக பாராட்டுக்களை கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். சிவகார்த்திகேயன், சூரி என யாருமே தன்னை பற்றி பேசினார்களா என்று கூட தனக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மிஷ்கின் பேசினது தப்பு: தமிழ்நாட்டில் நடிக்கத் தெரிந்த பெண்களே இல்லாதது போல மலையாளத்தில் இருந்து அன்னா பென்னை அழைத்து வந்து வினோத்ராஜ் படமாக்கியிருக்கிறார் என மிஷ்கின் சார் பேசியதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதே படத்தில் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ் பேசக்கூடிய பெண்ணாக அதுவும் அந்த கிளைமேக்ஸ் காட்சியில் அந்த பூசாரி பண்ணும் அத்தனை சேட்டைகளையும் சகித்துக் கொண்டு நடித்ததே நான் தான் என்றும் முல்லை கூறியுள்ளார்.
தங்கலான், வாழை, கொட்டுக்காளி: பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் படத்தில் லீடு ரோலில் நடித்த பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் கேரளா தான். வாழை படத்தில் டீச்சராக நடித்த நிகிலா விமல் கேரளா தான். கொட்டுக்காளி படத்தில் நடித்த அன்னா பென் கேரளா தான். இப்படி தொடர்ந்து இயக்குநர்கள் மலையாள நடிகைகளுக்கு மட்டும் லீடு ரோல் கொடுத்து விட்டு தமிழ்நாட்டு பெண்களை துணை நடிகைகளாக போடும் நிலை தான் இங்கே உள்ளது என்றார்.

பலாத்கார காட்சிக்குத்தான் நாங்கள்: கொட்டுக்காளி படத்தில் தவறான தொடுதலை பெற்றோர்கள் முன்னிலையில், ஒரு பெண்ணுக்கு பூசாரி ஒருவன் நடத்தும் மூடநம்பிக்கை காட்சியில் நடிக்க டஸ்கி டோன் கொண்ட பெண்களை பயன்படுத்துவது, பலாத்காரம் செய்வது போன்ற காட்சிகளில் டஸ்க்கி டோன் கொண்ட பெண்களை இயக்குநர்கள் பயன்படுத்துவது எல்லாம் ஏன் என்று தான் தெரியவில்லை. இதையெல்லாம் சொன்னால், இதற்கு மேல் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்று கூட தெரியவில்லை.
தமிழ் பெண்கள் என்ன தக்காளி தொக்கா?: இப்படியொரு அரசியல் தான் இங்கே நிலவிக் கொண்டிருக்கிறது. ப்ரொடக்ஷன் சைடுல கேரளாவில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் மும்பையில் இருந்தும் அழைத்து வந்து இயக்குநர்கள் கஷ்டப்பட்டு அவங்களுக்கு கருப்பு மேக்கப் போட்டு, தமிழ் சொல்லிக் கொடுத்து நடிக்க வைப்பதற்கு பதில் தமிழ் தெரிந்த நடிகைகளையே நடிக்க வைக்கலாமே என தனது ஆதங்கத்தை கொட்டுக்காளியாக கொட்டித் தீர்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications