Gandhi Kannadi Day 3 Box Office: காந்தி கண்ணாடி 3வது நாள் வசூல்.. கோடிகளை தொட்ட பாக்ஸ் ஆபீஸ் கணக்கு!
சென்னை: விஜய் டிவி கலக்கப்போவது யாரு பாலா இதற்கு முன்னர் பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். அவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்து வெளியான படம் காந்தி கண்ணாடி. இந்த படத்தை இயக்குநர் ஷெரிஃப் இயக்கியுள்ளார். படம் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி சிவகார்த்திகேயனின் மதராஸி படமும் வெளியானது. இதனால் பாலாவின் காந்தி கண்ணாடி படத்திற்கு கணிசமான அளவிலான திரையரங்குகளே கிடைத்தது. மேலும் முதல் படத்திலேயே சிவகார்த்திகேயன் படத்துடன் மோதுகிறீர்களே என்று கேட்டதற்கு, பாலா சொன்ன பதில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது. அதாவது, எப்போதும் அண்ணன் அண்ணன் தான். நான் முதலில் முடியவே முடியாது என்று சொன்னேன். ஆனால் அண்ணன் படத்திற்கு வருபவர்களுக்கு டிக்கெட் இல்லை என்றால் என் படத்தை பார்க்க வருவார்கள் அல்லவா, அந்த நம்பிக்கையில் தான் படத்தை ரிலீஸ் செய்ய ஒப்புக் கொண்டேன். சிவகார்த்திகேயன் அண்ணன் படம் எப்போதும் ஹிட் அடித்து விடும் என்று கூறினார்.

படக்குழு: காந்தி கண்ணாடி படத்தில் பாலாவுக்கு ஜோடியாக நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க சுமார் 50 கதாநாயகிகளிடம் கேட்டபோது அவர்கள் அனைவரும் மறுத்துவிட்டதாகவும், 51வது கதாநாயகி நமிதா கிருஷ்ணமூர்த்தி தான் ஒப்புக் கொண்டார் என்றும் இயக்குநர் ஷெரிஃப் கூறினார். படத்தில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா என மூத்த நடிகர்களும் நடித்துள்ளார்கள். ஜெய் கரண் என்ற தயாரிப்பாளர் படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் விமர்சனம்: படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கலக்கப்போவது யாரு பாலா கதாநாயகனாக நடித்துள்ளதால், படம் செம காமெடியாக இருக்கும் என்று நினைத்து சென்ற ரசிகர்களை சிரிக்கவும் வைத்து, எமோஷனலில் அழவும் வைத்துள்ளது படக்குழு என்று ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள்.

வசூல் விபரம்: படம் முதல் நாளில் ரூபாய் 35 லட்சங்கள் வசூலித்ததாக சாக்நிக் வலைதளம் தெரிவித்தது. அதேபோல் இரண்டாவது நாளில் ரூபாய் 45 லட்சங்கள் வசூலித்தது என்றும் சாக்நிக் வலைதளம் தெரிவித்தது. வார இறுதியான மூன்றாவது நாளில் படம் ரூபாய் 65 லட்சங்கள் வசூலித்ததாக சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் படம் முதல் மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும், மொத்தம், ரூபாய் 1.45 லட்சங்கள் வசூலித்துள்ளது என்றும் வெளிநாடுகளில் ரூபாய் 1.63 கோடிகளை வசூலித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. உலக அளவில் படம் ரூபாய் 3 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. இது படக்குழுவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாட்களிலும் படம் கூடுதல் வசூல் குவிக்கும் என படக்குழு நம்பிக் கொண்டு உள்ளது. படத்தின் வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்னும் எதுவும் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











