கல்யாணம் காலை 4.30 டூ 6… எந்த தேதி தெரியுமா? KPY பாலாவின் நச் பதில்!
சென்னை: சென்னை உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவி செய்து வருகிறார் KPY பாலா. பலரை சிரிப்பால் மகிழ்வித்து வந்த பாலா, தற்போது உதவி செய்து பலரை மகிழ்வித்து வருகிறார். கடலூரில் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலா தனது திருமணம் குறித்த கேள்விக்கு வேடிக்கையாக பதில் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் பாலா.தற்போது இவர் பல்வேறு இசைவெளியீட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார். அதுமட்டுமின்றி சினிமாவிலும் பாலாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி பிசியாக இருக்கும் பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலானவற்றை ஆதரவற்றவர்களுக்கு, இலவச ஆம்புலன்ஸ் என தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் தாழம்கூடவில் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு ஐந்து ஆயிரம் சதுர அடி இடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேபிஓய் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்த நிலத்தை வழங்கியதுடன் அந்த பகுதியில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அஷ்மிதா நடனம் ஆடி மக்களை மகிழ்வித்தார்.
கடவுள் இருக்கிறார்: இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேபிஒய் பாலா, மக்களிடம் இருந்து வரும் அன்பும் ஆதரவும் தான் என்னை இவ்வளவு தூரம் ஓட வைத்துள்ளது. முன்பு எல்லாம் சம்பாதித்த பணத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்தேன், இப்போது உதவி செய்வதற்காகவே சம்பாதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. என்னையும் ஒரு ஆளாக மதித்து பலர் உதவி கேட்டு மனுக்களை கொடுக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, இன்னும் பல உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கடவுள் இருக்கிறார் மக்களுக்கு தேவையானதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் இதுதான் என் வேலை.அதை நான் நிச்சயம் செய்வேன்.
கல்யாணம் எப்போ: இதையடுத்து செய்தியாளர் இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்து வருவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பாலா, இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள். எது சரி,எது தப்பு என்று அனைவருக்கும் தெரிகிறது. எல்லா இளைஞர்களையும் நாம் தப்பாக சொல்லிவிட முடியாது. ஒரு சிலர்தான் அப்படி இருக்கிறார்கள் அவர்களுக்கு அட்வைஸ் செய்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை என்றார். இதையடுத்து மற்றொரு செய்தியாளர் எப்போ கல்யாணம் என்று கேட்க, அய்யோ இந்த கேள்வி கேட்டீங்களா என கூறிவிட்டு, எனக்கு கல்யாணம் காலை 4.30 டூ 6... ஆனா தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications











