»   »  திரைப்படங்களுக்கு எதிராக வழக்கு தொடர்பவர்களுக்கு தண்டனை தர வேண்டும்! - கேயார்

திரைப்படங்களுக்கு எதிராக வழக்கு தொடர்பவர்களுக்கு தண்டனை தர வேண்டும்! - கேயார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே தடை கேட்டு பிரச்னை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று கேயார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கே.ஆர். வெளியிட்ட அறிக்கை வருமாறு':

தமிழ்த் திரையுலகம் ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. 'லிங்கா' படத்திற்கான பிரச்னை தற்போதுதான் முடிந்திருக்கும் நிலையில், 'கொம்பன்' படத்திற்கு சில அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடியது, திரையுலகினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது,

KR urges Punishment to persons sue against new movies

பல கோடிகளைக் கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், படத்தை தணிக்கை செய்துவிட்டு, வியாபாரம் பேசி, விளம்பரம் செய்து, நல்ல தியேட்டர்களை தேடிப்பிடித்து ரிலீஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட வேண்டிய நேரத்தில் கோர்ட்டுகளுக்கு அலைந்து கொண்டிருந்தால் எப்படி படத்தை வெளியிட முடியும்? மற்ற தொழில்களுக்கும் சினிமாவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

திடீரென்று ஒரு படத்தை ரிலீஸ் செய்துவிட முடியாது, குறைந்தது ஒருமாதமாவது திட்டமிட்டு உழைத்தால் தான் அறிவித்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியும். அப்படிப்பட்ட இக்கட்டான நேரங்களில், சம்மந்தமே இல்லாதவர்கள் எங்கிருந்தோ வந்து ஒரு படத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தடை கேட்பது எந்த வகையில் நியாயம்?

கோர்ட்டு வழக்குகள், புகார்கள் என்று செய்திகள் வந்துவிட்டாலே அந்தப்படம் வெளிவருமா வராதா என்ற பயத்தில் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் பின்வாங்கி விடுகிறார்கள். வீட்டை விற்று, கந்து வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுப்பவர்களுக்கு எல்லா வகைகளிலும் சிக்கல்களை ஏற்படுத்திவிட்டு, வழக்குப் போட்டவர்கள் தப்பித்து போய்விடுகிறார்கள்.

சினிமா என்கிற விளம்பர வெளிச்சத்தில் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதற்கு ஆசைப்பட்டு, ஒரு தொழிலையே அழிக்க நினைப்பது எந்த வகையில் நியாயம்? வழக்குப் போடுபவர்களுக்கும், பிரச்னையை உருவாக்குபவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை, அதனால்தான் எந்தப் படத்திற்கும் யார் வேண்டுமானாலும் வழக்குப் போடலாம் என்ற துர்பாக்கிய நிலை உருவாகியிருக்கிறது.

மத்திய அரசின் தணிக்கை குழு சான்றளித்த படங்களுக்கு எதிராக மற்ற அமைப்புகளும், தனிநபர்களும் சென்சார்போர்டு நடத்த ஆசைப்படுவதற்கு அரசாங்கம் சட்டரீதியாக முற்றப்புள்ளி வைக்க வேண்டும்.

இந்தியாவில் இந்திப்பட உலகிற்கு அடுத்து தமிழ்த்திரையுலகம் தான் முன்னிலையில் உள்ளது. புதுமையாக படைப்பாளிகளும், திறமையான தொழில் நுட்பக் கலைஞர்களும் இங்குதான் அதிகம். ஆனால், இந்தியாவிலேயே அடிக்கடி வழக்குப் போட்டு திரைப்படங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் கலாச்சாரமும் இங்குதான் வேகமாகப் பரவி வருகிறது.

ஜாதி, மதம், என் கதை, என் தலைப்பு என்ற பெயரில் சமீபகாலமாக அதிகரித்து வரும் வழக்குகள் எதிர்காலத்தில் எல்லா இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதை தெளிவாகப் புரியவைக்கின்றன.

ஜனநாயக நாட்டில் வழக்குப் போடும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது, ஆனால் அதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. மணிசூட் (MONEY SUIT) என்கிற பணம் தொடர்பான வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட தொகையை கோர்டில் டெபாசிட் செய்துவிட்டுத் தான் வழக்குத் தொடர முடியும்.

அதுபோல ஒரு திரைப்படத்திற்கு எதிராக வழக்குத் தொடர வேண்டுமானால், அந்தப் படத்தின் மொத்த பட்ஜெட்டில் குறைந்தது 10 சதவீதத்தையாவது கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் எந்தச் செலவும் இல்லாமல் விளம்பரம் தேடிக்கொள்பவர்களும், படைப்புச் சுதந்திரத்தை ஒடுக்க நினைப்பவர்களும் யோசித்து செயல்படுவார்கள்.

எனவே, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி, மத்திய சட்டத்துறை அமைச்சர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஆகியோர், இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே தடைகேட்டு பிரச்னை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டங்களை இயற்ற வேண்டும்.

நீதிமன்றங்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், தயாரிப்பாளர்கள் அச்சமின்றி தொழில் செய்யவும் தேவையான சட்டங்களை இயற்ற வேண்டிய கட்டாய சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

அத்துடன் அவர்கள் குறிப்பிட்டவாறு அந்தப்படத்தில் ஏதேனும் பிரச்னைகள் இல்லை என்கிற நிலையில் வழக்குப் போட்டவர்களுக்கு தண்டனையும் அபராதமும் விதிப்பதற்கு ஏற்றவகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தமிழ்த் திரையுலகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

English summary
Tamil Film Producer Council former president KR urged punishment to persons who filed case against new movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil