Dhanush - அந்தப் பெயர் வர காரணம் கமல்தான் - தனுஷ் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இதுவா?
சென்னை: Dhanush (தனுஷ்) நடிகர் தனுஷுக்கு அந்தப் பெயர் வருவதற்கான காரணம் கமல் ஹாசனின் குருதிப்புனல் திரைப்படம் என்பது தெரியவந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த இடங்களுக்கு அவர் சென்றுவிட்டார். இதனால் அவருக்கென்று ரசிகர் பட்டாளம் இருக்கிறது. முக்கியமாக இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று தனுஷ் பெயரும் பெற்றிருக்கிறார்.
வாத்தி தனுஷ்: தனுஷ் கடைசியாக நடித்து வெளியான படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படத்தில் சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாஸ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் தமிழ் - தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகியிருந்தது. இதன் மூலம் இத்தனை வருடங்கள் தெலுங்கில் அறிமுகமாகாமல் இருந்த தனுஷ் தற்போது டோலிவுட்டிலும் அறிமுகமாகியிருக்கிறார். இருப்பினும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

கேப்டன் மில்லரில் தனுஷ்: வாத்தி படத்துக்கு பிறகு தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை சாணிக்காயிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். பீரியட் படமாக இந்தப் படம் உருவாகும் என கூறப்பட்டிருப்பதால் இந்தப் படத்தின் மீது தனுஷ் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி முதல் இரண்டு படங்களில் கவனம் ஈர்த்த அருண் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தன்னை நிரூபிப்பார் எனவும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
சன்பிக்சர்ஸ் அறிவிப்பு: இதற்கிடையே தனுஷுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்திருக்கிறது. ஏற்கனவே படிக்காதவன், உத்தமபுத்திரன் ஆகிய படங்களை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் தற்போது தனுஷின் படத்தை தயாரிக்கவிருக்கிறது. இப்படம் தனுஷுக்கு 50ஆவது படமாக உருவாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தை தனுஷே இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ராஜ்கிரண் நடிப்பில் பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கி இயக்குநராகவும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கஷ்டப்பட்ட குடும்பம்: துள்ளுவதோ இளமை படத்தில் அவர் அறிமுகமானபோது கடுமையான உருவ கேலியை சந்தித்தார். இருப்பினும் அதனையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அவர் தனது திறமையை நம்பி மட்டுமே நடைபோட்டு இன்று ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார். இந்தச் சூழலில் வெங்கடேஷ் பிரபு என்ற இயற்பெயர் கொண்ட அவருக்கு தனுஷ் என பெயர் வந்ததற்கான காரணம் குறித்து தெரியவந்திருக்கிறது.
கமல்தான் காரணம்: அதாவது கமல் ஹாசன் நடித்த படம் குருதிப்புனல். அந்தப் படத்தில் மிஷன் தனுஷ் என்று (நாசரின் பெயர் தனுஷ். அவரை பிடிப்பதற்கான மிஷன்) வரும். அதனைப் பார்த்த கஸ்தூரி ராஜா தனது மகனை நடிக்க வைக்கும்போது இந்தப் பெயரை வைத்துவிடலாம் என முடிவு செய்து துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானபோது தனுஷ் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











