குஷ்பு மகள் அனந்திதாவின் 'டபுள் அக்குபன்சி'.. மகளுக்காக களமிறங்கிய குஷ்பு!
சென்னை: ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ரொமான்டிக் ஃபேண்டஸி திரைப்படமான 'டபுள் அக்குபன்சி'. அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில், முற்றிலும் புதுமையான ஒரு கதைக்களத்தோடு உருவாகியுள்ள இத்திரைப்படம் ஜூன் 12 அன்று ரசிகர்களுக்கு தியேட்டரில் ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கத் தயாராகிவிட்டது.
இத்திரைப்படத்தைப் பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பூ சுந்தர் தனது 'அவினி கிரியேஷன்ஸ்' மூலம் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஸ்பெஷலே, குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா சுந்தர் இப்படத்தின் மூலம் 'கிரியேட்டிவ் தயாரிப்பாளராக' தடம் பதித்திருப்பது தான். படத்தின் புரமோஷன் பணிகளைப் படுவேகமாக முடுக்கிவிட்டுள்ள தயாரிப்புத் தரப்பு, தற்போது குஷ்பூ மற்றும் அனந்திதா சுந்தர் இருவரும் இணைந்து ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், 'டபுள் அக்குபன்சி' படம் ஜூன் 12-ஆம் தேதி ரிலீஸாவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, தியேட்டர்களில் வந்து குடும்பத்தோடு படத்தைப் பார்க்குமாறு ரசிகர்களுக்கு அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர்.

இரட்டை வாழ்க்கை : 'டபுள் அக்குபன்சி' திரைப்படம் ஒரு மனிதனின் அடையாளம் , அவன் வாழும் இரட்டை வாழ்க்கை மற்றும் அவனது காதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, செம சுவாரசியமான ஒரு 'ரொமான்டிக் ஃபேண்டஸி' பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தொடாத ஒரு வித்தியாசமான ஜானரில், இளசுகளையும் குடும்ப ஆடியன்ஸையும் கவரும் வகையில் இந்த படம் இருக்கும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நட்சத்திரப் பட்டாளம்: இந்த படத்தில், வளர்ந்து வரும் இளம் நடிகர் சந்தோஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் ரேஷ்மா வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், 'அந்தகாரம்' பட புகழ் வினோத் கிஷன், வி.டி.வி கணேஷ், மற்றும் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்து இருக்கும் ரொமான்டிக் ஃபேண்டஸி படம் என்பதால் இவருடைய பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளது


Click it and Unblock the Notifications