தக் லைஃப் படத்தில் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. இரண்டு பேருக்கு என்ன வேலை தெரியுமா?
சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் இன்னும் சில நாட்களில் ரிலீஸாகவிருக்கும் நிலையில் தக் லைஃப் படத்திலிருந்து ஒரு விஷயம் கசிந்திருக்கிறது.
கமல் ஹாசன் கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது. இடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டது. அதற்கு பதிலாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும் மணிரத்னமும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஷூட்டிங் அப்டேட்: இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி செர்பியாவில் விறுவிறுப்பாக நடந்தது. இதனையடுத்து மக்களவைத் தேர்தலால் நிறுத்தப்பட்டிருந்த ஷூட்டிங் இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது.
தக் லைஃப்பில் சிம்பு: இதற்கிடையே படத்தில் கமிட்டாகியிருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் படத்திலிருந்து வெளியேறிவிட்டார்கள். அதேசமயம் சிம்பு இந்தப் படத்தில் இணைந்தார். அவர் தொடர்பான கேரக்டர் இண்ட்ரோ வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் சிம்பு பல காட்சிகளை சிங்கிள் டேக்கிலேயே முடித்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.
நட்சத்திரங்களின் வாரிசுகள்: இந்நிலையில் தக் லைஃப் படத்தில் நட்சத்திரங்களின் வாரிசுகள் பணியாற்றுகிறார்கள். அதாவது குஷ்பூவின் இளைய மகளான அனந்திகாவும், நடிகர் ரகுமானின் இளைய மகள் அலிஷா ஆகியோர் இந்தப் படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார்கள். தனது முதல் மகளுக்கு நடிகையாக வேண்டும் என்ற ஆசையும், இளைய மகளுக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசையும் இருப்பதாக குஷ்பூ சமீபத்திய பேட்டியில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











