மனசே நிறைஞ்சுடுச்சு.. மகள் கல்யாணம் முடிந்த கையோடு மருமகனுடன் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்த குஷ்பு
சென்னை: நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி குடும்பத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற திருமணக் கொண்டாட்டங்கள் இனிதே நிறைவடைந்துள்ளன. இவர்களது மூத்த மகள் அவந்திகா, ஸ்ரவண் ஸ்ரீனிவாசனை கரம் பிடித்த நிலையில், திருமணம் முடிந்த பிறகு முதல் முறையாக குடும்ப புகைப்படங்களையும், மணமக்களின் அழகிய தருணங்களையும் பகிர்ந்து நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அதாவது, நடிகை குஷ்புவும், இயக்குநர் சுந்தர்.சியும் தங்களது மூத்த மகள் அவந்திகாவின் திருமணத்தை மிகவும் எளிமையாகவும், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையிலும் நடத்த முடிவு செய்திருந்தனர். அதன்படி கடந்த ஜூன் 25-ஆம் தேதி அவந்திகாவுக்கும், ஸ்ரவண் ஸ்ரீனிவாசனுக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தனர்.

இப்படி இருக்கையில், திருமணம் நிறைவடைந்த பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை குஷ்பு பகிர்ந்துள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதனுடன், கணவர் சுந்தர்.சி, மகள்கள் அவந்திகா மற்றும் அனந்திதா, மருமகன் ஸ்ரவண் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படத்தையும், மணமக்கள் கை கோர்த்து நடந்து வரும் அழகிய புகைப்படத்தையும், திருமண சடங்குகளின் போது எடுக்கப்பட்ட நெகிழ்ச்சியான தருணங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
எமோஷனல்: மேலும் தனது பதிவில், "இந்த தருணத்தில் எங்களது உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. ஒரு பெற்றோராக குடும்பம்தான் எங்களது வாழ்க்கையின் மையம். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. எங்களது அன்பு மகள் அவந்திகாவுக்கும், ஸ்ரவண் ஸ்ரீனிவாசனுக்கும் கடந்த ஜூன் 25-ஆம் தேதி திருமணம் நடைபெற்றதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், "குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் சூழ்ந்த நிலையில் நடைபெற்ற இந்த திருமணம் எங்களது வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாக மாறிவிட்டது. மகிழ்ச்சியாலும், நன்றியுணர்வாலும் எங்களது இதயம் நிரம்பியுள்ளது. மணமக்கள் விரும்பியபடியே மிகவும் சிறிய அளவில், நெருக்கமானவர்களுடன் மட்டும் இந்த திருமணத்தை நடத்தி வைத்தோம். சில நேரங்களில் மிகவும் அழகான நினைவுகள் அமைதியாக, நமக்கு மிகவும் நெருக்கமானவர்களுடன் மட்டுமே உருவாகின்றன" என்றும் குஷ்பு தனது பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

எல்லாரும் வாழ்த்துங்கள்: இந்நிலையில், அவந்திகா - ஸ்ரவண் தம்பதியினரின் புதிய வாழ்க்கைக்கு அனைவரும் அன்பையும், வாழ்த்துகளையும் வழங்க வேண்டும் என்றும், அவர்களது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியும், புரிதலும், அழகான நினைவுகளும் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்றும் குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். "மிகுந்த பெருமையுடனும், அன்புடனும் எங்களது புதுமண தம்பதிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்" என்றும் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.
மற்றொருபுறம், குஷ்பு பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். "அழகான குடும்பம்", "பெற்றோரின் பெருமை முகத்தில் தெரிகிறது", "மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்", "குஷ்புவின் பதிவு கண்களை கலங்க வைத்துவிட்டது" என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பதிவுகள் குவிந்து வருகின்றன.
தாயின் மனநிலை: எது எப்படியோ... மகளின் திருமணத்தை மகிழ்ச்சியுடன் நடத்தி முடித்த பிறகு, ஒரு தாயின் மனநிலையை அப்படியே வெளிப்படுத்தும் வகையில் நடிகை குஷ்பு பகிர்ந்துள்ள இந்த உணர்ச்சிப்பூர்வமான பதிவு, திருமண புகைப்படங்களை விட அதிகமாக ரசிகர்களின் மனதை தொட்டு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications