Kushi Trailer: விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் உருகும் சமந்தா... வெளியானது குஷி ட்ரெய்லர்!
ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள திரைப்படம் குஷி.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சிவ நிர்வாணா இயக்கியுள்ளார்.
செப்டம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ள குஷி, சமந்தா ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
வெளியானது குஷி ட்ரெய்லர்: கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தற்போது தெலுங்கு, இந்தி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கோலிவுட்டில் இருந்து தற்போது பான் இந்தியா நடிகை என வலம் வரும் சமந்தா, படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குஷி.

விஜய் தேவரகொண்டா ஜோடியாக சமந்தா நடித்துள்ள இப்படத்தை சிவா நிர்வாணா இயக்கியுள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. காஷ்மீர், ஹைதராபாத் உட்பட பல பகுதிகளில் குஷி ஷூட்டிங் நடைபெற்றது. காதல் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் இருந்து சமந்தாவின் போஸ்டர்கள், மேக்கிங் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகி இருந்தன.
இந்நிலையில் தற்போது குஷி படத்தின் ட்ரெய்லரும் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் குஷி ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ள இந்த ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

முழுக்க முழுக்க காதல் பின்னணியில் உருவாகியுள்ள குஷி படத்தில், விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் ரியலாகவே ரொமான்ஸ் செய்துள்ளதைப் போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். காஷ்மீரில் இருந்து தொடங்கும் விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் காதல் கதை, அடுத்தடுத்து பல மோதல்கள், ஊடல்களுடன் ஜாலியாக நகர்கிறது. காதலர்களுக்கு இடையேயான ஈகோவை பின்னணியாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது.
அதேநேரம், ரோஜா, பம்பாய், சீதா ராமம், அன்டே சுந்தராகினி படங்களின் சாயலோடும் குஷி உருவாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாகுந்தலம், யசோதா என அடுத்தடுத்து தோல்விப் படங்களால் துவண்டு இருக்கும் சமந்தாவுக்கு குஷி சிறப்பான கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். செப்டம்பர் 1ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் குஷி திரைப்படம் வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











