8 தோட்டாக்கள் தெலுங்கு ரீமேக்கில் குட்டி ஜானு.. தெலுங்கிலும் குவியும் வாய்ப்புகள்!
சென்னை : விஜய் சேதுபதி,திரிஷா இணைந்து நடித்த 96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை கௌரி கிஷான் .
தமிழில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் மலையாளத்தில் கதாநாயகியாக வலம் வருகிறார்.
இந்த நிலையில் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 8 தோட்டாக்கள் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட அதில் கதாநாயகியாக நடிக்க கௌரி கிஷான் ஒப்பந்தமாகியுள்ளார்.

கல்லூரி மாணவியாக
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் உருவான மாஸ்டர் பொங்கலுக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்று வசூல் சாதனையும் புரிந்தது. இதில் கல்லூரி மாணவியாக முக்கிய வேடத்தில் நடிகை கௌரி கிஷான் நடித்திருந்தார்.

96
விஜய் சேதுபதி,திரிஷா முதல் முறையாக இணைந்து நடித்த 96 திரைப்படத்தில் திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனங்களையும் கவர்ந்த கௌரி கிஷான் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகை ஆனார். 96 கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து பலரும் இன்று வரை இவரை குட்டி ஜானு என அழைத்து வருகின்றனர். மேலும் 96 தெலுங்கு ரீமேக்கிலும் சமந்தாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் இவரே நடித்தார்.

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக
அதைத்தொடர்ந்து தனுஷின் கர்ணன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக படங்களில் நடிக்க உள்ளார். மலையாளத்தில் அனுகிரகீதன் ஆண்டனி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார்.

தெலுங்கு ரீமேக்கில்
இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 8 தோட்டாக்கள் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் வெற்றி ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படம் 8 வெவ்வேறு கோணங்களில் கொண்டு நகரும் , காட்சிக்கு காட்சி கைத்தட்டல்களை பெற்றிருந்தது குறிப்பாக எம்எஸ் பாஸ்கரின் நடிப்பு பிரமாதமாக இருக்கும்.

சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பல பாராட்டுகளைப் பெற்றது . இந்தப் படம் இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட நடிகர் சந்தோஷ் ஷோபன் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினியாக கௌரி கிஷான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தயாரிக்கிறார். இதன் மூலம் கௌரி தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.


Click it and Unblock the Notifications











