Lal Salaam - லால் சலாம் படத்துக்கு தடையா?.. இது என்ன புது சிக்கல்?.. காரணம் இதுதானாம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். அந்தப் படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக சறுக்கலில் இருந்த ரஜினிகாந்த் ஜெயிலர் மூலம் எழுந்து நின்றார். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனது மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்க கமிட்டானார். படமானது பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்க கமிட்டானார். ஏற்கனவே ஐஸ்வர்யா இயக்கிய 3, வை ராஜா வை ஆகிய படங்கள் சரியாக போகாததால் இந்தப் படத்தை ஹிட் படமாக்க வேண்டும் என்ற முனைபில் ஐஸ்வர்யா பணியாற்றியிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

மொய்தீன் பாய் ரஜினிகாந்த்: இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கெஸ்ட் ரோல் என்றாலும் படத்தில் மொத்தம் ஒரு மணி நேரம்வரை வருவார் என்று கூறப்படுகிறது. மும்பையில் அவர் ஒரு தாதாவாக இருப்பார் என்றும் ஒரு பிரச்னையிலிருந்து விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் காப்பாற்றுவது போல் அவர் கதையில் பயணப்படுவார் என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது.
ஆடியோ லான்ச்: படமானது பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை சாய்ராம் கல்லூரியில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
சங்கி இல்லை: அதில் பேசிய ஐஸ்வர்யா, எனது தந்தையை எல்லோரும் சங்கி என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் சங்கி இல்லை. அவர் சங்கியாக இருந்திருந்தால் கண்டிப்பாக லால் சலாம் போன்ற படத்தில் நடித்திருக்கமாட்டார். இந்தப் படம் கண்டிப்பாக நல்ல ஹிட்டடித்து உங்களது ஃபேவரைட் இயக்குநர் லிஸ்ட்டில் நானும் இடம் பிடிப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் ரஜினிகாந்த்தும், பல விஷயங்களை பேசிவிட்டு விஜய் Vs ரஜினி என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிக்கல்: படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் லால் சலாம் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது படத்தை ரிலீஸ் செய்ய குவைத் அரசு தடை விதித்திருப்பதாகவும்; படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டாலும் இதில் இந்து - முஸ்லீம் மத பிரச்னையும் பிரதானமாக இருக்கலாம் என கருதி இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் அப்செட்டாகியிருக்கின்றனர்.
இதுமட்டுமில்லை: அதேபோல் லால் சலாமில் தன்யா பாலகிருஷ்ணா நடித்திருக்கிறார். அவர் சில வருடங்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதில், 'தமிழர்கள் பிச்சைக்காரர்கள்' என்று சொன்னதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அந்தப் பதிவை தான் போடவே இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு தன்யா விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











