Thalapathy 69: இன்னொரு அரபிக் குத்து கன்ஃபார்ம்.. தளபதி 69 கதாநாயகி யாருனு பாருங்க!
சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை தெரிவித்தபோது தமிழ் சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதுங்கப்போவதாக அறிவித்தார். இதனால் இவரது 69வது படம் இவரது கடைசிப் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தினை ஹெச். வினோத் இயக்கவுள்ளார் என்ற தகவல் படக்குழு முன்னரே அறிவித்தது. மேலும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதும், இந்தக் கதை ஹெச். வினோத், நடிகர் கமல்ஹாசனுக்குச் சொன்ன கதை எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்றில் இருந்து அதாவது, அக்டோபர் முதல் தேதியில் இருந்து, படத்தில் யாரெல்லாம் விஜய் உடன் நடிக்கின்றார்கள் என்ற, அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்தனர். அந்த வகையில் படத்தில், பேபி டயால் நடிப்பதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார் என்ற தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் அதிக பிசினஸ் உள்ள நடிகர் என்றால் அது விஜய். அதேநேரத்தில் விஜய் தமிழ் சினிமா நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான தி கோட் படத்திற்கு விஜய்யின் சம்பளம் ரூபாய் 200 கோடி என படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் ஒப்புக் கொண்டார். மேலும் கோட் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யும் முன்னரே படம் லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். இது இல்லாமல் படம் பாக்ஸ் ஆஃபீஸில் மட்டும் ரூபாய் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படியான நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. மேலும், தயாரிப்பாளர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 69வது படம் குறித்த அறிவிப்புகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்போது படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் என்றும் படத்திற்கு அனிருத் இசை அமைப்பார் என்றும் கூறப்பட்டது. இந்தத் தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
தளபதி 69: படத்தினை தயாரிப்பதன் மூலம் கே.வி. என் புரடெக்ஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தமிழில் காலடி எடுத்து வைக்கின்றது. இந்தத் தயாரிப்பு நிறுவனம்தான் அண்மையில் வெளியாகியுள்ள தேவாரா படத்தினை தயாரித்தது. படத்தின் தயாரிப்பு நிறுவனம், படத்தில் யாரெல்லாம் நடிக்கின்றார்கள் என்ற அறிவிப்பை தெரிவித்து வருகின்றது. இதன் அடிப்படையில் ஏற்கனவே, தளபதி 69 படத்தில் பேபி டயல் நடிக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டது. இவர் தமிழில் கங்குவா படத்திற்குப் பின்னர் நடிக்கின்றார்.

பூஜா ஹெக்டே: இந்நிலையில் இன்று படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார் என்ற தகவலை படக்குழு தெரிவித்துள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும் இவர் ஏற்கனவே விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். பீஸ்ட் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கினார். படத்திற்கு அனிருத் இசை அமைத்தார். அனிருத்தின் இசையில், பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டேவும் விஜய்யும் ஆடியது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வரிசையில் விஜய்யுடன் நடிகை பூஜா ஹெக்டே மீண்டும் இணைந்துள்ளதால், படத்தில் அரபிக்குத்து பாடலைப் போல் செமயான குத்துப் பாடல் இருக்கும் என ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











