லேடி சூப்பர்ஸ்டார் டைட்டிலோடு வெளியான நயனின் நெற்றிக்கண் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ள நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் எப்படி இருக்கு என படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விமர்சனங்களை குவித்து வருகின்றனர்.
Recommended Video
பார்வையற்ற பெண்ணாக வித்தியாசமான தோற்றத்தில் நடிகை நயன்தாரா இந்த படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒடிடி வெளியீடாக நயன்தாராவின் இந்த படம் வெளியாகி இருக்கிறது.

லேடி சூப்பர் ஸ்டார் டைட்டில்
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் இன்று ரிலீஸ் ஆன நெற்றிக்கண் படத்தில் முதன் முறையாக லேடி சூப்பர் ஸ்டார் என்கிற டைட்டில் உடன் நெற்றிக்கண் படம் வெளியாகி உள்ளது. தியேட்டர்கள் திறக்காத நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் இந்த படம் ரிலீசாகி உள்ளது.

பார்வையற்ற பெண்ணாக
நடிகர் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அவள் பேய் படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் படம் உருவாகி இருக்கிறது. நடிகை நயன்தாரா இதுவரை நடித்திராத பார்வையற்ற பெண் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்து மிரட்டி உள்ளார். முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் காது கேளாத பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார்.

ஏமாற்றம்
லேடி சூப்பர்ஸ்டார் டைட்டிலில் நடிகை நயன்தாராவின் அதிரடி இன்ட்ரோ மட்டுமே சூப்பராக இருப்பதாகவும். எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லாமல் ஏமாற்றி விட்டதாகக் கூறியுள்ளார். திரையில் எப்போதுமே டென்ஷன் இருந்தாலும் அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்கவே இல்லை. வில்லன் கதை மற்றும் வில்லனை நயன் வேட்டையாடும் விஷயங்களில் எந்தவொரு புதுமையும் இல்லை என விளாசித் தள்ளி இருக்கிறார்.

டாக்டர் தான் சைக்கோ
"இந்த படத்திலேயும் டாக்டர் தான் சைக்கோ, ரேப்பிஸ்ட்.. " என வழக்கமாக எடுக்கப்படும் சைக்கோ த்ரில்லர் படம் போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படத்திலும் மருத்துவர் சைக்கோவாக நடித்திருப்பார். டோவினோ தாமஸின் ஃபாரன்சிக் படத்திலும் டாக்டர் தான் சைக்கோ.

தனியாளாக
நயன்தாராவின் நடிப்பு வேற லெவல் என்றும் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்வையற்ற பெண்ணாக நடிக்காமல், கண்களை திறந்து கொண்டே பார்வையற்ற பெண்ணாக நடித்து அசத்தி உள்ளார். கொரிய திரைப்படமான பிளைண்ட் படத்தை விட ஏகப்பட்ட கூடுதல் காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் இந்த நெட்டிசன் கூறியுள்ளார்.

வெற்றிக்கண்
நெற்றிக்கண் திரைப்படத்திற்கு 5க்கு 4 மார்க் கொடுக்கலாம். நயனின் மிகச் சிறந்த படமாக நெற்றிக்கண் இருக்கிறது. ஒரே ஆளாக படத்தை தூக்கி நிறுத்தி வெற்றியடைய செய்துள்ளார் என ஸ்ரீதேவி ஸ்ரீதர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு பாராட்டி உள்ளார்.

வேற லெவல் இன்ட்ரோ
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் இன்ட்ரோ சீனே வேற லெவலில் இருக்கிறது. நிச்சயம் படம் வேற லெவலில் ஹிட் அடிக்கும் என்பது நிச்சயம் என நயன்தாரா ரசிகர்கள் படத்தின் ஸ்க்ரீன் ஷாட்டை எல்லாம் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











