‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்!
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் அடுத்த படத்திற்கு ஹவுஸ் ஓனர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை: சொல்வதெல்லாம் புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ஹவுஸ் ஓனர் என்று பெயரிட்டுள்ளனர்.
நீதிமன்றங்களில் சத்தியம் வாங்கும்போது உரைக்கப்படும் "சொல்வதெல்லாம் உண்மை" என்ற வாக்கியம் நீதிமன்றங்களைவிட இவருக்குத்தான் பொருந்தும் எனும் அளவுக்கு அந்த வாக்கியத்திற்கு அவ்வளவு தொடர்புள்ள நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நாட்டமையாக இருந்து பல பஞ்சாயத்துக்களை செய்து நீதி வழங்கும் நடிகையான இவர் அவ்வப்போது கோலிவுட் பக்கமும் தலைகாட்டுவார். சமீபத்தில் கூட அருள்நிதி நடிப்பில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்நிகழ்ச்சியின் மூலம் ஏற்பட்ட சர்ச்சைகளால் அவ்வப்போது பிரச்சனைகளை சந்தித்தாலும் அயராது உழைக்கும் உழைப்பாளி, தைரியமாக பிரச்சனைகளை கையாளக்கூடியவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
தமிழ் சினிமாவில் இருக்கும் பெண் இயக்குனர்களில் குறிப்பிடத்தகுந்தவர். இவர் ஏற்கனவே ஆரோகனம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் ஆடுகளம் புகழ் கிஷோர், ஸ்ரீரஞ்சனி, சுபலக்ஷ்மி, சேத்தன் கடம்பி, கவிதாலயா கிருஷ்ணன் இவர்களோடு லவ்லின் சந்திரசேகர் என்பவர் அறிமுகமாகிறார். இந்தப்படத்திற்கு "ஹவுஸ் ஓனர்" என்று தலைப்பு வைத்துள்ளார்.
பலரின் குடும்ப பிரச்சனையை இழுத்துப்போட்டு வெளுத்து வாங்கிய லட்சுமி இப்போது ஹவுஸ் ஓனர் என்ற பெயரில் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது என்னுடைய முதல் மற்றும் கடைசி படமாக நினைத்து உழைப்பேன் என டிவிட்டரில் சூளுரைத்துள்ளார். இப்படித்தான் பல இயக்குனர்கள் வீர வசனம் பேசுகிறார்கள் என்று தோன்றினாலும், இவர் சொல்வதெல்லாம் உண்மை என நம்பலாம் மக்களே...!!


Click it and Unblock the Notifications











