நாலு நாளைக்கு பெட்ரோல் இல்லேன்னா...- லட்சுமி ராமகிருஷ்ணனின் நெருங்கி வா முத்தமிடாதே!
சென்னை: நாலு நாளைக்கு நாட்ல பெட்ரோல் இல்லேன்னா எப்படியிருக்கும்? - நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த யோசனைதான் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படமாக உருவாகியுள்ளது.
அழகான அம்மா நடிகைகளில் சரண்யாவுடன் சரிக்கு சரியாக மல்லுக்கட்டும் அளவுக்கு நடிப்பும் அழகும் மிக்கவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
பல சூப்பர் ஹிட் படங்களில் நாயகன் அல்லது நாயகியின் அம்மாவாக ஜொலித்தவர்.

இரண்டாவது படம்
நடிப்பு தொழிலாக இருந்தாலும், இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் இவரது கனவு. அதை ஏற்கெனவே ஆரோகணம் என்ற படத்தின் மூலம் அழுத்தமாக பதிவு செய்தார். ஆரோகணம் படத்தின் வெற்றி, லட்சுமி ராமகிருஷ்ணனை மீண்டும் அடுத்த படம் இயக்கத் தூண்டியுள்ளது.
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் நெருங்கி வா முத்தமிடாதே என தலைப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் நடிகைகள்
ஏ.வீ.ஏ நிறுவனம் சார்பில் இந்த திரைப்படத்தை ஏ.வீ அனூப் தயாரிக்கிறார். ஷபீர் கதாநாயகனாகவும் பியா பாஜ்பாய் கதாநாயகியாகவும் நடிக்க 'லூசியா' புகழ் ஸ்ருதி ஹரிஹரன், தம்பி ராமைய்யா, ஒய்.ஜி மகேந்திரன், அம்பிகா, ஏ.எல் அழகப்பன், தலைவாசல் விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்
இப்படத்தின் ஒளிப்பதிவு வினோத் பாரதி, படத்தொகுப்பு தேசிய விருது பெற்ற சாபு ஜோசப், இசை மேட்லி ப்ளூஸ், சண்டை பயிற்சி மிரட்டல் செல்வா, கலை-இயக்கம் ராஜா மற்றும் குமார் கவனிக்கின்றனர். இப்படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியுள்ளனர்.

கதை
தேசிய பெட்ரோல் தட்டுப்பாடு என்பதை மைய கருத்தாகக் கொண்டு நகரும் இந்த நெருங்கி வா முத்தமிடாதே திரைப்படத்துக்குள் நான்கு கதைகளைச் சொல்லியிருக்கிறாராம் லட்சுமி ராமகிருஷ்ணன்.
படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.

கமர்ஷியல்
முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் முழுமையான வித்தியாசம் தெரிகிறதே...
"ஆமாம்.. ஆரோகணம் படத்தில் ஒரு செய்தி இருந்தது. அது கிட்டத்தட்ட ஒரு கலைப் படமாக இருந்தாலும், கமர்ஷியலாக நன்றாகப் போனது. இந்தப் படம் முழுக்க முழுக்க கமர்ஷியல்தான். அதே நேரம் உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக திரைக்கதை அமைந்துள்ளது."

வித்தியாசம்
முதல் படம் இயக்கியதற்கும், இந்தப் படத்துக்கும் என்ன வேறுபாடு உணர்கிறீர்கள்?
பொதுவாக படங்கள் இயக்குவது லேசுப்பட்ட காரியமல்ல. முதல் படத்தில் இருந்த ஒரு தயக்கம், இந்தப் படத்தில் முற்றாக விலகிவிட்டது. ரொம்ப வசதியாக இயக்க முடிந்தது.

நடிக்கலையா?
இந்தப் படத்தில் நீங்கள் நடிக்கவில்லையா?
ஒரு சின்ன வேடத்தில் நடித்துள்ளேன்.

ஏதாவது ஒன்றில் மட்டும்
ஒரு நடிகையாக இந்தப் படத்தில் நீங்கள் முழுமையாக இருந்திருந்தால் படத்துக்கு பலம் கூடியிருக்குமே?
உண்மைதான். ஆனால் அது சிரமமாக இருந்திருக்கும். என் காட்சிகளை வேறு யாராவது இயக்க வேண்டி வரும். அது சரியாக வந்திருக்காது. ஒன்று நான் நடிகையாக மட்டும் இருக்க வேண்டும். அல்லது இயக்குநராக மட்டும் இருக்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்.

எப்போ ரிலீஸ்?
படம் முடிந்துவிட்டதா.. எப்போது வெளியீடு?
இரண்டு பாடல்கள் தவிர, மீதி காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. படம் பார்த்த தயாரிப்பாளர் நாமே வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார். செப்டம்பரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.


Click it and Unblock the Notifications











