‘லக்ஷ்மி’யை கமலின் சலங்கைஒலியுடன் ஒப்பிடாதீர்கள்.. அது வேற லெவல்: பிரபுதேவா
பிரபுதேவா நடித்துள்ள லக்ஷ்மி படம் இவ்வாரம் ரிலீசாக இருக்கிறது.
சென்னை: லக்ஷ்மி படம் நடனப் படங்களிலேயே வேற லெவலில் இருக்கும் என்றும், அதனை கமலின் சலங்கை ஒலியுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் நடிகர் பிரபுதேவா கேட்டுக் கொண்டுள்ளார்.
ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் நடனத் திரைப்படம் 'லக்ஷ்மி'. பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி 'தித்யா' ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படத்தை பற்றிய அனுபவங்களை பகிந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் பிரபுதேவா, "இந்திய அளவில் இருக்கும் நல்ல திறமையான குழந்தைகளை தேர்ந்தெடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் விஜய். தேவி, லக்ஷ்மி படங்களில் விஜய் இயக்கத்தில் நடித்திருக்கிறேன். அடுத்து தேவி 2 படத்தை எடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.
ஐஸ்வர்யா டான்ஸராக இருந்தாலும் இதில் அவருக்கு டான்ஸ் இல்லை, நடிக்க மட்டும் வைத்திருக்கிறோம். குழந்தைகள் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நான் 4,5 டேக் வாங்கினாலும் குழந்தைகள் குறிப்பாக தித்யா முழு டான்ஸையும் ஆடி முடித்து தான் நிறுத்துவார்.
சலங்கை ஒலி என்ற டான்ஸ் படம் இதற்கு முன்பு வெளிவந்திருக்கிறது. அது வேற லெவல். அதனோடு இதை ஒப்பிட வேண்டாம்" என்றார் பிரபுதேவா.


Click it and Unblock the Notifications











