Lal Salaam Box Office Day 2: லால் சலாம் பாக்ஸ் ஆபிஸ்... இரண்டாவது நாளிலேயே மோசமான வசூல்
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா தயாரித்துள்ள திரைப்படம் லால் சலாம். சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் 9ம் தேதி ரிலீஸான லால் சலாம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் ஏமாற்றம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லால் சலாம் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ்
ஜெயிலரை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள இந்தப் படம் அதிக எதிர்பார்ப்புடன் வெளியானது. லைகா தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 3வது படமாக லால் சலாம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து, மத அரசியலுக்கு எதிரான படமாக உருவாகியுள்ளது லால் சலாம். இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி இந்தப் படத்தி இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா. தேர்தலில் வெற்றிப் பெற ஒரு கிராமத்தில் இந்து - முஸ்லிம் இடையே மோதலை உருவாக்க நினைக்கிறது ஒரு கும்பல். இதனை மும்பை தொழிலதிபர் மொய்தீன் பாய் எப்படி தடுக்கிறார் என்பதே லால் சலாம் படத்தின் கதை.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பின்னரே ரஜினியின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்களை பார்க்க முடிகிறது. வழக்கமான இமய மலை பயணத்தை தவிர்த்து, ராமர் கோயில் விசிட், உபி முதலமைச்சர் யோகியின் காலில் விழுந்து ஆசி வாங்கியது என பாஜகவின் அடையாளங்களுடன் வலம் வருவதாக ரசிகர்களே விமர்சிக்கத் தொடங்கினர். இதனையடுத்து ரஜினி சங்கி என விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கெல்லாம் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் பதில் சொல்லும் விதமாக, எனது அப்பா சங்கி இல்லை என எமோஷனல் ஆனார் ஐஸ்வர்யா. ஆனால் அப்போதும் கூட சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை என ரஜினி விளக்கம் கொடுத்தது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் லால் சலாம் படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் 4.5 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பாக்ஸ் ஆபிஸ் தகவலின் படி முதல் நாளில் 3.55 கோடி தான் கலெக்ஷன் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளிலும் லால் சலாம் வசூல் ஆட்டம் கண்டுள்ளது. முதல் நாளை விடவும் குறைவாக வசூலாகியுள்ளது. அதன்படி லால் சலாம் இரண்டாவது நாள் வசூல் 3 கோடி ரூபாய் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் முதல் இரண்டு நாட்களில் லால் சலாம் வசூல் 6.55 கோடி ரூபாய் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் ரஜினியின் கேமியோ ரோல் 15 நிமிடங்கள் தான் இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்காக 45 நிமிடங்களுக்கும் அதிகமாகவே இடம்பெற்றுள்ளது. அப்படி இருந்தும் லால் சலாம் படத்தின் வசூல் குறைந்துள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











