Lal Salaam Disaster: "லால் சலாம் ஒரு ஷோ கூட House Full ஆகல..” காரணத்தை போட்டுடைத்த பிரபலம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஜெயிலர் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. ஆனால் அதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் இந்த மாதம் ரிலீஸான லால் சலாம் படு தோல்வியடைந்துள்ளது. ரஜினி கேமியோ ரோலில் நடித்திருந்தாலும், சுமார் 45 நிமிடங்கள் வரை அவருக்கான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் லால் சலாம் தோல்விப் படம் எனவும் அதற்கான காரணம் பற்றியும் பிரபலம் ஒருவர் விவரித்துள்ளார்.
லால் சலாம் தோல்விக்கு என்ன காரணம்
பேட்ட, தர்பார், அண்ணாத்த என தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, ஜெயிலர் திரைப்படம் வெறித்தனமான கம்பேக் கொடுத்தது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. இதனால் அடுத்தடுத்து ரஜினி நடிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என சொல்லப்பட்டது.

அதன்படி தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த லால் சலாம் இந்த மாதம் 9ம் தேதி வெளியானது. லைகா தயாரித்த இந்தப் படத்தில் ரஜினி கேமியோவாக நடித்திருந்தாலும் அவரது காட்சிகள் 45 நிமிடங்களுக்கும் மேல் இருந்தன. அதோடு பாட்ஷா ஸ்டைலில் மும்பை ரிட்டர்ன் மொய்தீன் பாய் கேரக்டரில் ஆக்ஷன் ப்ளஸ் மாஸ் காட்சிகளிலும் நடித்திருந்தார் ரஜினிகாந்த். ஆனாலும் இந்தப் படம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமர்சன ரீதியாகவே லால் சலாம் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதற்கெல்லாம் ரஜினியின் சில அரசியல் ரீதியான செயல்பாடுகள் தான் காரணம் என ரசிகர்களே விமர்சித்தனர். அவர் நேரடியாக பாஜகவை ஆதரிக்கவில்லை என்றாலும், ராமர் கோயில் வழிபாடு போன்ற நடவடிக்கைகள் ரஜினி மீதான அதிருப்திக்கு காரணம் எனவும் சொல்லப்பட்டது. இதனையெல்லாம் கண்கூடாக பார்த்தப் பின்னரும் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் தனது அப்பா சங்கி இல்லை என ஆதங்கப்பட்டார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யாவின் பேச்சு சர்ச்சையானதும் 'சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை’ என ரஜினி விளக்கம் கொடுத்தார். இதுபோல ரஜினியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும் ரசிகர்களால் விமர்சனத்துக்குள்ளாகிக் கொண்டே இருந்தது. இதனால் தான் லால் சலாம் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் லால் சலாம் தோல்வி குறித்து திரை பிரபல சித்ரா லட்சுமணன் விவரித்துள்ளார்.
அதில், லால் சலாம் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்த அளவிற்கு மோசமான படம் இல்லை என்றாலும், அதிகமாக நெகட்டிவான விமர்சனங்கள் தான் கிடைத்துள்ளன. இதற்கு காரணம் இரண்டாம் பாதி திரைக்கதை மோசமாக இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் லால் சலாம் படத்தை நான் பார்க்கவில்லை என்றாலும் அது நிச்சயமாக வெற்றி பெறவில்லை எனக் கூறியுள்ளார். முதல் நாளே ஒரு ஷோ கூட ஹவுஸ் ஃபுல் ஆகாத படம் என்ற சாதனை லால் சலாமிற்கு கிடைத்துள்ளது எனவும் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். இது உண்மை தான் எனவும் லால் சலாம் உண்மையில் தோல்விப் படம் தான் என்றும் நெட்டிசன்களும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











