Lal Salaam: மும்பையில் ஆக்ஷனில் மிரட்டிய லால் சலாம் மொய்தீன் பாய்... அப்போ கன்ஃபார்மா அதுதானா?
மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது லால் சலாம் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.
நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துவிட்ட பின்னரே லால் சலாம் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் ரஜினி.
இதற்காக ரஜினி மும்பை சென்றதுமே அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற லால் சலாம் படப்பிடிப்பு குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்ஷனில் மிரட்டும் லால் சலாம் மொய்தீன் பாய்: அண்ணாத்த படத்தின் தோல்வியில் இருந்து மீண்டுவர, அடுத்தடுத்து 3 படங்களில் கமிட்டாகியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. முதலில் நெல்சனுடன் ஜெயிலர் படத்தில் இணைந்த ரஜினி, அடுத்து லால் சலாம், தலைவர் 170 படங்களிலும் கமிட்டாகியுள்ளார். இதில் ஜெயிலர் படத்தில் தனது ஃபோர்ஷனை முடித்துவிட்ட ரஜினி, தற்போது லால் சலாம் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் கேரக்டரில் நடிக்க ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். திருவண்ணாமலை, சென்னை பகுதிகளில் தொடங்கிய லால் சலாம் ஷூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ரஜினியும் மும்பை சென்றிருந்த நிலையில் அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.

அதன்படி, லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் கேரக்டரில் ரஜினி நடித்து வருகிறார். மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம் என்ற கேப்ஷனுடன் வெளியான ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், பாட்ஷாவுக்குப் பிறகு லால் சலாம் படத்தில் ரஜினி முஸ்லிம் கேரக்டரில் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடிப்பதால், மொத்தமே 20 நிமிடங்கள் தான் அவரது காட்சிகள் வரும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினியின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 நாட்கள் வரை நடைபெற்ற இந்த சண்டைக் காட்சி மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதாம். இதேபோன்று இன்னொரு சண்டைக் காட்சியிலும் ரஜினி நடிக்கவுள்ளதாகவும், அதன் படப்பிடிப்பு மைசூரில் நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ரஜினியின் கேரியரில் பாட்ஷா திரைப்படம் மிகப் பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. இந்தப் படத்தில் வரும் மாணிக் பாட்ஷா கேரக்டரின் தழுவலாக மொய்தீன் பாய் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் தான் ரஜினியின் காட்சிகள் அனைத்தும் மும்பையில் ஷூட் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா தயாரிக்கும் லால் சலாம் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாகக் கொண்டு உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











