எனக்கு தமிழ் தெரியாதது எவ்வளவு நல்லது தெரியுமா?: சுவாரஸ்ய விஷயம் சொன்ன அதிதி
சென்ன: தனக்கு தமிழ் தெரியாதது நல்லதாகப் போச்சு என்று அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அதிதி அரவிந்த்சாமியுடன் மேடைக்கு வந்து பேசினார்.

அதிதி
மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தை அடுத்து செக்கச் சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார் அதிதி. காற்று வெளியிடை ரிலீஸான போதே மீண்டும் மணி சார் இயக்கத்தில் நடிக்க ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்தார் அதிதி. அதை மனதில் வைத்து தன்னுடைய அடுத்த படத்திலும் அதிதிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் மணிரத்னம். சும்மா சொல்லக் கூடாது காற்று வெளியிடை படத்தில் அதிதி தனது நடிப்பால் அசத்தியிருந்தார்.

இந்தி
இந்திக்கார பெண்ணான அதிதி தமிழ் கற்றுக் கொண்டுள்ளார். முழுமையாக பேச முடியாவிட்டாலும் அவரின் முயற்சியை பாராட்ட வேண்டும். எத்தனையோ நடிகைகள் பல ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடித்தும் மொழியை கற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் 3 படங்களில் நடித்துள்ள அதிதி இந்த அளவுக்கு தமிழ் பேசுவதை பாராட்டியே ஆக வேண்டும்.

மொழி
தமிழ் மொழி சரியாக தெரியாததால் மணி சாருடன் அதிக நேரம் செலவிட முடிந்தது என்று செக்கச் சிவந்த வானம் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார் அதிதி. மணி சாரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் படத்தில் மீண்டும் நடித்ததில் மகிழ்ச்சி என்றார். மொழி தெரியாவிட்டாலும் செட்டுக்கு வரும்போது வசனங்கள் எல்லாம் பக்காவாக படித்துவிட்டு வருவார் என்று அதிதியை அரவிந்த்சாமி பாராட்டினார்.

நிறைவேறுமா?
அடுத்தடுத்து மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ள அதிதிக்கு மீண்டும் அவர் படத்தில் நடிக்க வேண்டுமாம். மணிரத்னத்தின் அடுத்த படத்திலும் அதிதிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதிதி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க உள்ளார். சைக்கோ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை மிஷ்கின் இயக்குகிறார்.


Click it and Unblock the Notifications











