விஜய் சேதுபதியின் இலவச துணிக்கடை.. பயன்பெறும் மக்கள் சொல்றதைக் கேளுங்க!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தற்போது சினிமா மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அவர் சத்தமே இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு இலவச உடைகளை அளிக்கும் செயலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத தகவல். அதுவும் துளி என்ற தனியார் தன்னார்வலர் அமைப்புடன் இணைந்து இந்த உதவிகளைச் செய்து வருகிறார். இது குறித்து காணலாம்.
துணை கதாபாத்திரம், நடிகர், வில்லன், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர் விஜய் சேதுபதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படமான தலைவன் தலைவி படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதேபோல் கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான படமான மகாராஜா அவரது 50வது படம். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. தமிழ் சினிமாவில் பலருக்கும் ஒர்க் அவுட் ஆகாத சில சென்டிமென்ட்கள் இவருக்கு சிறப்பாக ஒர்க் அவுட் ஆனது. மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றியை குவித்தது. வெளிநாடுகளிலும் சக்கை போடு போட்டது.

இலவச ஆடைகள்: இப்படி இருக்கும்போது, நடிகர் விஜய் சேதுபதி 'துளி' என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, கடந்த ஆறு ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு இலவச ஆடைகளை வழங்கி வருகிறார். இதற்காக நடத்தப்பட்டு வருகிற துணி கடையில் பணிபுரியும் பெண் ஊழியர் கூறுகையில் பல சுவாரஸ்யமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, " ஏழை எளியவர்களுக்கு இலவசமாக ஆடைகளை வழங்கி வருகிறோம்.
வாழ்த்தும் பாராட்டும்: அதே நேரத்தில் அவர்களுக்கு இலவசமாக தாங்கள் ஆடைகளை வாங்கி உடுத்துகிறோம் என்ற உணர்வு ஏற்படாமல் இருக்க, சில ஆடைகளை மிகவும் குறைந்த விலையில் கொடுத்து வருகிறோம். இதில் எந்த லாப நோக்கமும் இல்லை. ஆடைகளை வாங்கிச் செல்பவர்களுக்கு எந்தவிதமான மன ரீதியான நெருடல் இருக்க கூடாது என்று இவ்வாறு கொடுத்தும் வருகிறோம். பயனர்கள் பலரும் எங்களிடத்தில் வந்து, அவர்களின் குழந்தைகள் கல்லூரிக்கு இங்கு வாங்கிய துணிகளை அணிந்து செல்கிறார்கள் என்று கூறும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அது மிகவும் எமோஷனலாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. இதற்காகவே விஜய் சேதுபதி சாருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த கடை சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பலரும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து கூறி பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











