இரவு சிவன் கோயிலில் வழிபாடு.. நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் கடைசி நிமிடம்!
சென்னை : நடிகைச்சுவை நடிகரான மயில்சாமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 57.
இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மயில்சாமியின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நகைச்சுவை நடிகர் மயில்சாமி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த மயில்சாமி சினிமாவில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என தீராத ஆசையுடன் இருந்தார். தீவிர முயற்சிக்கு பின் தாவணிக்கனவுகள் படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று யாருக்கும் தெரியாமலே வந்து சென்றார். இதையடுத்து, கன்னிராசி படத்தில், கவுண்டமணி, சாமி போட்டோவுக்கு மாலை போட்டுக்கொண்டு இருக்கும் போது, பெரியவரே...என அழைத்துக்கொண்டு தலையில் கூடையுடன் டவுசர் போட்டுக்கொண்டு முதல் வசனம் பேசினார்.

முன்னணி நடிகர்களுடன்
அந்த படத்தைத் தொடர்ந்து ரஜினி,கமல், பிரபு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மயில்சாமி நடிகராக மட்டுமில்லாமல், சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளார். மறைந்த சின்னக்கலைவாணர் விவேக்குடன் இணைந்து தூள் படத்தில் "திருப்பதியில் லட்டுக்கு பதிலா அல்வா கொடுக்குறாங்க பாஸ்" என்று அட்ராசிட்டி செய்து இருப்பார்கள்.

அரசியலில் ஈடுபாடு
அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துகளையும் பொது இடத்தில் பேசி வந்த மயில்சாமி, கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி பல உதவிகளை செய்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக விசில் சின்னத்தில் போட்டியிட்டு 1,435 வாக்குகளை பெற்றார்.

கடைசி நிமிடங்கள்
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தீவிர சிவபக்தரான மயில்சாமி, மஹாசிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் இரவு முழுவதும் சிவராத்திரி பூஜையில் பங்கேற்றுவிட்டு, அதிகாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலிப்பதாக கூறிய, சிறிது நேரத்திலேயே சுயநினைவை இழந்துள்ளார்.

பிரபலங்கள் இரங்கல்
இதையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். அவரின் மறைவு திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மிகப்பெரிய இழப்பு
நகைச்சுவை நடிகர் யோகி பாபு,தனது இரங்கல் செய்தியில், சினிமா வாய்ப்பு தேடிய காலத்தில் இருந்து மயில்சாமி அண்ணனை தெரியும். ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. நிறைய பேருக்கு அண்ணன் உதவி செய்து இருக்கிறார். அவரின் மறைவு மிகப்பெரிய இழப்பு என வருத்தத்துடன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











