வெளியானது சித்ராவின் கால்ஸ் பட ட்ரெயிலர்.. அதிலும் அந்த கடைசி டயலாக்.. சித்துவோட ரியல் லைஃப்!
சென்னை: பிரபல விஜேவான சித்ரா கடைசியாக நடித்த கால்ஸ் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சென்னை நசரத் பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதலரை பதிவு திருமணம் செய்து ஒன்றரை மாதத்திற்குள் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியது.

நடத்தையில் சந்தேகம்
இதனை தொடர்ந்து சித்ராவின் கணவரான ஹேமந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் 8ஆம் தேதி இரவு விடிய விடிய சண்டை போட்டது தெரியவந்தது.

கால்ஸ் படத்தின் ட்ரெயிலர்
இதனை தொடர்ந்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார் ஹேமந்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சித்ரா கடைசியாக நடித்த கால்ஸ் படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது.

லீடிங் ரோலில் சித்ரா
இந்தப் படத்தில் சித்ரா கால் சென்டர் ஊழியராக லீடிங் ரோலில் நடித்துள்ளார். இந்தப் படத்தை சபரீஷ் இயக்கியுள்ளார். இதில் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
த்ரில்லர் படமாக மிரட்டலாக உள்ளது கால்ஸ் படத்தின் ட்ரெயிலர். கால் சென்டரில் பணிபுரியும் பெண் ஒருவர் 5 பேரால் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுவதாகவும் தெரிகிறது.

அந்த நாள் மட்டும் வரலன்னா..
இருட்டு அறையில் சித்ரா கண்ணீர் விட்டப்படியே இந்த உலகத்துல நானும் பல கனவுகளோட பொறந்திருக்கேன் என்று பேச ஆரம்பிக்கிறார். இறுதியில், அந்த நாள் மட்டும் என் வாழ்க்கையில வரலன்னா நானும் ஒரு சராசரி மனுஷியா வாழ்ந்திருப்பேனோ என்னவோ.. அந்த பிரபஞ்சத்துக்கு தான் வெளிச்சம் என்று கண்ணீருடன் முடிக்கிறார்.

நிஜ வாழ்க்கையோடு..
இந்த ட்ரெயிலரை பார்த்த ரசிகர்கள் சித்ரா பேசும் டயலாக்குகள் அவர் நிஜ வாழ்க்கையோடு ஒத்து போவது போல இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த நாள் மட்டும் உன் வாழ்கையில் வாராமல் இருந்து இருந்தால் இன்று நீ எங்களோடு இருந்து இருப்பாய் என்று சித்ராவின் மரணத்தை குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











