S Janaki: கமல்ஹாசனுக்கு அடையாளம் கொடுத்த குரல்.. மூத்த பாடகி ஜானகி குறித்து பலருக்கும் தெரியாத தகவல்கள்
சென்னை: இந்திய திரை உலகில் 20க்கும் மேற்பட்ட குரல்களில் சுமார் 48 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடிய மிக மூத்த பாடகி எஸ். ஜானகி வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற தகவல் இந்தியத் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 88. இந்நிலையில் அவர் குறித்த பலரும் அறியாத பல தகவல்களில் ஒன்று, உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அடையாளம் கொடுத்தவர் இவர் என்பதுதான். அந்த சுவாரஸ்ய தகவல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கமல்ஹாசன் என்றால் உலகநாயகன் என்று எல்லோரும் கூறிவிடுவோம். ஆனால் அந்த உலக நாயகன் தனது திரை வாழ்க்கையை தொடங்கியது களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் இருந்து தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த படத்தில் குழந்தையாக கமல்ஹாசன் நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டு, காதில் பூ வைத்துக் கொண்டு, முழுக்க முழுக்க ஒரு தெய்வக் குழந்தை போல, " அம்மாவும் நீயே அப்பாவும் நீயே" என்ற பாடலுக்கு இரண்டு கைகளையும் கூப்பியபடி நின்று வாயசைத்துக் கொண்டு இருப்பார்.

குழந்தை போல: கமல்ஹாசன் வாய் அசைத்தது, ஜானகி அம்மாவின் குரலுக்கு என்பது இப்போது பலருக்கும் தெரியாத தகவல். ஆமாம், கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற அந்த பாடலை பாடியவர் பாடகி எஸ். ஜானகி அம்மா தான். அப்போது அவருக்கு வயது, 22. இந்த வயதில் பலருக்குமே குரல் முதிர்ச்சி அடைந்து விடும், ஆனாலும் குழந்தை பாடும் பாடல் என்பதால் தனது குரலை ஒரு குழந்தை பாடுவது போல மாற்றிப் பாடினார். அந்த பாடல் அப்போது மிகப்பெரிய வெற்றிப் பாடலாக அமைந்தது.

மிகவும் முக்கிய பங்கு: இதனால் கமல்ஹாசனுக்கும் மிகப்பெரிய அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது. அந்த பாடலின் சோக வெர்ஷனுக்கும் கமல்ஹாசன் மிகவும் கண்களில் கண்ணீர் வரவழைக்கக்கூடிய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படி இன்றைக்கு சர்வதேச நாடுகளுக்குச் சென்று விருதுகள் பெற்று வரும் உலக நாயகனின் திரை வாழ்க்கை தொடங்கியதில், எஸ். ஜானகி அம்மாவின் பங்கு மிகவும் முக்கியமானது.


Click it and Unblock the Notifications