முஸ்லிமான மம்மூட்டி கொடுத்த பணத்தில் தான் தாலி வாங்கி கட்டினேன் - மறைந்த ஸ்ரீனிவாசனின் பழைய வீடியோ
கொச்சி: மொத்த மலையாள திரையுலகமும் சோகத்தில் உள்ளது. மலையாள திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீனிவாசன் நேற்று வயது மூப்பு மற்றும் உடல்நலக் கோளாறால் மறைந்தார். அவருக்கு வயது, 69. இவரது மறைவுச் செய்தி கேட்டதும் மொத்த திரையுலகமும் அவரது வீட்டிற்கு வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இப்படி இருக்கும்போது அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது தொடர்பான பழைய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இப்படி இருக்கும்போது மூத்த நடிகர்களாகவும் உச்ச நடிகர்களாகவும் உள்ள நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் உள்ளிட்டோர், ஸ்ரீனிவாசனின் மறைவுச் செய்தி கேட்டதும், மிக விரைவாக அவரது வீட்டிற்கு வந்து அவரது உடலுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டனர். இவர்கள் இப்படி அமர்ந்து கொண்டது அவர்களுக்கு இடையிலான நட்பை வெளிக்காட்டும் விதமாக இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மம்மூட்டி - ஸ்ரீனிவாசன் - மோகன்லால்: மறைந்த ஸ்ரீனிவாசன் மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகியோரின் காலகட்டத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற குணச்சித்திர நடிகர். இது மட்டும் இல்லாமல், மம்மூட்டி மற்றும் மோகன்லால் உடன் அவர் மிகவும் நெருக்கமான நட்பு பேணி வந்தார். இந்நிலையில் இவர் மறைந்த பின்னர், இவர்கள் நட்பு குறித்தான பல பழைய வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஒரு விருது நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லால், நடிகர் ஸ்ரீனிவாசனுக்கு கண்ணத்திலேயே முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்திய வீடியோ இப்போதும் உலா வருகிறது.
மம்மூட்டி பணத்தில் தாலி: இப்படி இருக்கும்போது, நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஸ்ரீனிவாசன் பேசும்போது, " நான் எனது மனைவியைத் திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வரும் போது மனைவிக்கு தங்கத்தில் தாலி அணிவித்து அழைத்து வரவேண்டும் என்ற ஆசை எனது அம்மாவுக்கு இருந்தது. ஆனால் அப்போது என்னிடத்தில் பணம் போதுமான அளவுக்கு இல்லை. ஒரு கிறிஸ்தவ நண்பன் கொடுத்த நானூறு ரூபாயும், முஸ்லிம் மதத்தை சேர்ந்த மம்மூட்டி கொடுத்த 2000 ரூபாய் பணத்தையும் வைத்துதான் நான் தாலி வாங்கி, எனது இந்து மனைவிக்கு அணிவித்து திருமணம் செய்து கொண்டேன். இதில் எங்கு மதப் பாகுபாடு உள்ளது? எல்லாம் ஒரே மதம் தான், எல்லோரும் வேண்டுவது அன்பு மட்டும் தான் என்று பேசுகிறார். அவரது இந்த வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











