ரஜினியோடு ஒரு இடத்துக்கு போனேன்.. நல்ல வேளை இப்போ போகல.. நிம்மதி பெருமூச்சு விடும் மூத்த நடிகை
சென்னை: ரஜினிகாந்த் 75 வயதிலும் மும்முரமாக நடித்துவருகிறார். அவரது இடைவிடாத ஓட்டத்தை பார்த்து இளம் நடிகர்களே வாயடைத்து போயிருக்கிறார்கள். கூலியை முடித்த கையோடு ஜெயிலர் 2வில் நடித்துவரும் அவர்; அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் தலைவர் 173 படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் மூத்த நடிகைகளில் ஒருவரான லதா; ரஜினிகாந்த் பற்றி பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தக்க வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். பலரும் அவரது இடத்தை பிடிக்க போட்டி போட்டாலும் இறுதியில் முடியாது என்பதை உணர்ந்து பின்வாங்கும் நிலைமை வந்துவிடுவது வழக்கம். ரஜினி இப்போதும் டாப் இடத்தில் இருப்பதற்கு காரணம் அவரது உழைப்பும், சின்சியரும்தான். 75 வயதில் பொதுவாக எல்லோரும் ஓய்வெடுக்கத்தான் விரும்புவார்கள். ஆனால் இவர் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு உழைத்துக்கொண்டிருக்கிறார்.
நல்ல குணம்: உழைப்பு மட்டுமின்றி ரஜினியின் நல்ல குணங்களும் அவரது இவ்வளவு பெரிய வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன. எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும்; தான் கீழே இருந்தபோது தனக்கு கை கொடுத்து தூக்கிவிட்டவர்களை மறப்பதே இல்லை அவர். தன்னை ஹீரோவாக அறிமுகம் செய்த கதாசிரியர் கலைஞானத்துக்கு சில வருடங்களுக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டிக்கொடுத்தது சின்ன உதாரணம். இதுபோல் பலருக்கு பல உதவிகளை செய்திருக்கிறார்.

கோபக்கார ரஜினி: இப்போது ரஜினிகாந்த் பக்குவமாக எல்லா விஷயங்களையும் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய இள வயதில் மொத்தமாக வேறு மாதிரிதான் இருந்தார். தனது மனதில் என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் யாருக்கும் அஞ்சாமல் பட் பட்டென்று பேசிவிடக்கூடியவர். ஜெயலலிதாவுடனான ரஜினிகாந்த்தின் மோதல் தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாக நீண்ட நாட்கள் இருந்தது நினைவுகூரத்தக்கது.
கிசுகிசுக்கள்: அதேபோல் அவரது வயது 30களில் இருந்தபோதெல்லாம் ஏகப்பட்ட கிசுகிசுக்களும் அவரை பற்றி வந்தவண்ணம் இருந்தன. அவற்றில் முக்கியமானதுதான் நடிகை லதாவுடனான கிசுகிசு. இரண்டு பேரும் காதலித்தார்கள் என்றும்; இதை விரும்பாத எம்ஜிஆர்; ரஜினிக்கு வாழ்நாளில் மறக்க முடியாதபடி ஒரு செயலை செய்துவிட்டதாகவும் கிளப்பிவிட்டார்கள். ஆனால் அது எவ்வளவு தூரம் உண்மை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும். ரஜினியை பற்றி தொடர்ந்து எழுந்த கிசுகிசுக்களால் அவரது மனைவி லதாவை பெண் கொடுக்கவே வீட்டார் யோசித்ததும் குறிப்பிடத்தக்கது.
லதாவின் பேட்டி: இந்நிலையில் மூத்த நடிகை லதா கொடுத்த பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், "நான், ரஜினிகாந்த், விஜயகுமார் மூன்று பேரும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்தோம். அந்த ஷூட்டிங்கில் நாங்கள் ஜாலியாக பேசிக்கொண்டிருப்போம். நாங்கள் ஒருமுறை பழனி முருகன் கோயிலுக்கு சென்று வந்தோம். அப்போது அதை பெரிய விஷயமாக்கிவிட்டார்கள். நல்ல வேளை இப்போது மாதிரி அப்போது யூடியூப் எல்லாம் இல்லை. அதனால் கிசுகிசுவோடு நிறுத்திவிட்டார்கள்.இந்த காலமாக இருந்திருந்தால் இஷ்டத்துக்கு பேசியிருப்பார்கள். அதெல்லாம் கடந்து வந்துவிட்டோம். இப்போது நல்ல குடும்ப நண்பர்களாக இருக்கிறோம். எம்ஜிஆருக்கு பிறகு தலைக்கனம் இல்லாத நபர் என்றால் அவர் ரஜினிதான்" என்றார்.


Click it and Unblock the Notifications











