இழுத்துக்கொண்டே செல்லும் கோச்சடையான் வழக்கு.. லதா ரஜினிகாந்துக்கு கோர்ட் போட்ட உத்தரவு!
பெங்களூர்: ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் அப்பாவை வைத்து இயக்கிய கோச்சடையான் படத்தின் வழக்கு பல வருடங்கள் ஆகியும் இன்னமும் முடியாமல் இழுத்துக் கொண்டே செல்கிறது. இந்த வழக்கில் செளந்தர்யா ரஜினிகாந்தின் அம்மாவும் நடிகர் ரஜினிகாந்தின் மனைவியுமான லதா ரஜினிகாந்த் தொக்காக மாட்டிக் கொண்டார்.
பல ஆண்டுகளாக விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருந்தவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கோச்சடையான் கோவிந்தா: கடந்த 2014ம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் 'கோச்சடையான்'. ஆரம்பத்தில் அப்பாவை வைத்து சுல்தான் தி வாரியர் எனும் லைவ் ஆக்ஷன் படத்தை இயக்கப் போகிறேன் என 2007ம் ஆண்டு முதல் ஏகப்பட்ட செலவுகளை செய்து வந்தார் செளந்தர்யா.
அதன் பின்னர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தீபிகா படுகோன் உடன் இணைந்து ராணா எனும் படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார் ரஜினிகாந்த். ஆனால், அந்த நேரத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், இரண்டு படங்களும் இணைந்து கோச்சடையானாக மாறியது. ஆனால், மோசமான விஎஃப்எக்ஸ் காரணமாக அந்த படம் ஃபிளாப் ஆனது.

என்ன பஞ்சாயத்து: கோச்சடையான் பட தயாரிப்பு நிறுவனங்களில் 'மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்' நிறுவனமும் ஒன்று. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த முரளி கோச்சடையான் படத்திற்காக 'ஆட் பீரோ' எனும் நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் போட்டது தான் அவருக்கு பெரும் சிக்கலாக மாறிவிட்டது. முரளி பணத்தை திருப்பி தராத நிலையில், லதா ரஜினிகாந்த் மீது அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்து விட்டது.
ஜாமீன் கிடைத்தது: தன் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரிவு எண் 196, 199, 420 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி அவர் மீது இருந்த 3 பிரிவுகளும் ரத்து செய்தது. மேலும், சில பிரிவுகளில் சிக்கியுள்ள லதா ரஜினிகாந்த் மீது சமீபத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஜாமீன் கோரிய நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











