தமிழகத்திற்காக வாங்க.. புது இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்.. அரசியலுக்கு பிளானா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகை தள்ளிப்போனாலும், அவரது குடும்பத்தில் இருந்து சமூக நலனுக்கான முன்னெடுப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில், ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்த் நீண்ட காலமாகவே 'பாரத் சேவா' என்ற அமைப்பின் மூலம் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், தற்போது அவர் 'மக்கள் மேடை' (Citizen Platform) என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளதாக அறிவித்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பதிவு, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. லதா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட நினைக்கும் அனைவரையும் தங்களோடு கைகோர்க்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
லதா ரஜினிகாந்தின் அழைப்பு: "இந்த மாநிலத்துக்காக, தமிழ்நாட்டிற்காக வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் அத்தனை பேரும் எங்கள் இயக்கத்தில் சேரலாம். நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுக்க வேண்டும். அப்படி உருவானால், ஒட்டுமொத்தமாக இணைந்து பல நன்மைகளை நம்மால் செய்ய முடியும். ஒன்றாகச் சேர்வோம், ஆக்கப்பூர்வமான காரியங்களைச் செய்வோம்."

இந்த இயக்கத்தின் சிறப்பம்சமே, இது சாமானிய மக்கள் முதல் ஓய்வு பெற்ற அதிகாரிகள் வரை அனைவருக்கும் கதவுகளைத் திறந்து வைத்துள்ளது தான். தமிழ்நாட்டிற்குத் தங்களது பங்களிப்பைச் செலுத்த நினைக்கும் மூத்த குடிமக்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், இராணுவ வீரர்கள் என யாராக இருந்தாலும், தங்களது வாழ்நாள் அனுபவத்தை இந்த இயக்கத்திற்குப் பயன்படுத்திக் கொடுக்கலாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"எங்களுடன் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டிற்காகவும், உங்களது சொந்த தொகுதிக்காகவும் வேலை செய்யலாம். உள்ளூர் அளவில் இருக்கும் தலைவர்கள், மாநிலத்தின் நலனுக்காக வேலை செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதனால் அனைத்து தரப்பு மக்களும் 'மக்கள் மேடை' இயக்கத்தில் ஒன்று சேருங்கள்" என லதா ரஜினிகாந்த் உருக்கமாகப் பேசியுள்ளார்.

அரசியல் மாற்றத்திற்கான அச்சாரமா?: இந்த வீடியோவின் இறுதியில் அந்தப் புதிய இயக்கத்திற்கான அதிகாரப்பூர்வ போஸ்டர் ஒன்றும் காட்டப்படுகிறது. அதில், 'தமிழகத்திற்காக வேகம் பெறுவோம்... ஒன்றாய் சேர்வோம்' என்ற வாசகம் கம்பீரமாக இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு புதிய அரசியல் நகர்வுகள் நடந்து வரும் வேளையில், லதா ரஜினிகாந்த் அனைத்து தரப்பு மக்களையும், அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து இப்படி ஒரு 'மக்கள் சக்தி' இயக்கத்தைத் தொடங்கியிருப்பது, எதிர்காலத்தில் ஒரு பெரிய சமூக அல்லது அரசியல் மாற்றத்திற்கான அச்சாரமாக இருக்குமோ என்ற கோணத்திலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதே நேரத்தில் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கிய அதே நாளில், லதா ரஜினிகாந்த் புது இயக்கம் தொடங்கி உள்ளது பெரும் பரபரப்பாக பேசப்படும் விசயமாக உள்ளது.


Click it and Unblock the Notifications