நடிகர் விஜயை காண இன்றும் என்எல்சியில் திரண்ட ரசிகர்கள்.. 2வது நாளாக தடியடி நடத்தி விரட்டியடிப்பு!
Recommended Video
சென்னை: நெய்வேலி என்எல்சி சுரங்க பகுதியில் விஜய் ரசிகர்கள் இன்றும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தடியடி நடத்தி அதிரடிப் படையினரும் போலீசாரும் விரட்டியடித்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் க்ளைமேக்ஸ் காட்சிகள் நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் காட்சியாக்கப்படுகிறது.
இதில் விஜயும் விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு எங்கு நடைபெறுகிறது என்ற தகவல் இதுவரை பெவளியாகாத நிலையில் கடந்த புதன் கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் நெய்வேலிக்கு சென்று விஜயிடம் விசாரணை நடத்தினர்.

நேற்று முதல் படப்பிடிப்பு
பின்னர் நடிகர் விஜயை கையோடு சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து விஜய்க்கு சொந்தமான வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரண்டு நாட்கள் நடைபெற்ற சோதனை நேற்று முன்தினம் இரவு நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று முதல் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.
நெய்வேலியில் ஷுட்டிங்
இதுவரை விஜயின் மாஸ்டர் பட ஷுட்டிங் எங்கு நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகாத நிலையில், வருமான வரித்துறையின் விசாரணை மற்றும் ரெய்டால் நெய்வேலி என்எல்சியின் இரண்டாவது சுரங்கத்தில் ஷுட்டிங் நடைபெறுகிறது என்ற தகவல் தீயாய் பரவியது. இதனால் நேற்றே விஜயை காண ரசிகர்கள் என்எல்சி பகுதியில் திரண்டனர்.
இன்றும் தடியடி
அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இந்நிலையில் இன்றும் பிற்பகல் முதல் விஜய் ரசிகர்கள் குடும்பத்துடன் என்எல்சிக்கு முன்பு திரண்டனர். பெண்கள், குழந்தைகள் என பலரும் விஜயை காணும் ஆர்வத்தில் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பரபரப்பு
இதையடுத்து கூட்டத்தினரை லேசான தடியடி நடத்தி போலீசாரும் அதிரடிப்படையினரும் விரட்டியடித்தனர். இதனால் ரசிகர்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடியதால் அப்பகுதியே கலவர பூமி போல் காட்சியளித்தது. இரண்டாவது நாளாக இன்றும் விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











