Siddique - சித்திக் மரணம்.. ட்ரெய்லர் வெளியீட்டை தள்ளி வைத்த கிங் ஆஃப் கோத்தா படக்குழு
திருவனந்தபுரம்: Director Siddique (இயக்குநர் சித்திக்) இயக்குநர் சித்திக் காலமானதை அடுத்து ட்ரெய்லர் வெளியீட்டை தள்ளி வைப்பதாக கிங் ஆஃப் கோத்தா படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் சித்திக்கிற்கு நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்னை ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த அவர் மெல்ல மெல்ல மீண்டு வந்தார். ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கொச்சி அமிர்தா மருத்துவமனையில் சில நாட்கள் முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்மோ கருவியின் துணையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. எப்படியாவது உடல்நலம் தேறிவிடுவார் என குடும்பத்தினரும், திரையுலகினரும், ரசிகர்களும் நம்பிக்கொண்டிருந்தனர்.

உயிரிழந்த சித்திக்: ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறவிருக்கிறது. சிறந்த இயக்குநர் சித்திக் உயிரிழந்ததால் மலையாள திரையுலகம் மட்டுமின்றி தமிழ் திரையுலகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவர் தமிழில் ப்ரெண்ட்ஸ், எங்கள் அண்ணா, சாது மிரண்டா, காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
மலையாளம், தமிழ் மட்டுமில்லை: மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் சித்திக் படங்கள் இயக்கியிருக்கிறார். மலையாளத்தில் அவர் எடுத்த பாடிகார்ட் படம் அங்கு ஹிட்டானதைத் தொடர்ந்து தமிழில் விஜய் நடிப்பில் காவலனாகவும், ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் பாடிகார்டாகவும் உருவானது. தமிழ் போலவே ஹிந்தியிலும் சித்திக்கே திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
திரையுலகினர் இரங்கல்: சித்திக்கின் மரணத்துக்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை கொடுத்துவருகின்றனர். மேலும் அவருடனான தங்களது நினைவுகளையும் எமோஷனலாகவும் பகிர்ந்துவருகின்றனர். இந்தச் சூழலில் சித்திக் மரணத்தையொட்டி கிங் ஆஃப் கோத்தா படக்குழு ஒரு முடிவை எடுத்திருக்கிறது.
ட்ரெய்லர் வெளியீடு தள்ளி வைப்பு: அதன்படி இன்று வெளியிடப்படவிருந்த கிங் ஆஃப் கோத்தா படத்தின் ட்ரெய்லர் வெளியீடு சித்திக் மரணமடைந்ததால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "இயக்குநர் சித்திக் மரணமடைந்ததன் காரணமாக இன்று வெளியிடப்படவிருந்த கிங் ஆஃப் கோத்தா படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது. அவரது குடும்பத்தினருக்கும், அவரை விரும்பும் ஒவ்வொருவருக்கும் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிங் ஆஃப் கோத்தா: துல்கர் சல்மான் நடிப்பில் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் கிங் ஆஃப் கோத்தா உருவாகியிருக்கிறது. இதன் டீசர் அண்மையில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது. அதேபோல் நடிகை ரித்திகா சிங் ஒரு பாடலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. படமானது ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











