அதுக்கு மனசு வேணும்.. நலிந்த நடிகர்களுக்கு லாரன்ஸ் ரூ.25 லட்சம் உதவி..பாராட்டும் பிரபல நடிகர்!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்காக ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், நடிகர்களுக்கு முன்னணி திரையுலப் பிரபலங்கள் உதவிகள் செய்து வருகின்றன.
நடிகர் சங்கத்துக்கு
நடிகர் ராகவா லாரன்ஸ், ரூ. 3 கோடி நிவாரண நிதியை அளிப்பதாக அறிவித்தார். இதையடுத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய், விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் என வழங்கினார். இப்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சேவைதான் கடவுள்
'நடிகர் உதயாவுக்கு நன்றி. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 25 லட்சம் ரூபாய் வழங்குகிறேன். சிறிய வேண்டுகோள், சங்கங்களில் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் எனக்கு பல வீடியோக்கள் வருகின்றன. தனியாக என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். யாராவது உதவி செய்ய விரும்பினால் என்னோடு சேர்ந்து கொள்ளலாம். ஒரு ரூபாய் கூட உதவிதான். சேவைதான் கடவுள்' என்று தெரிவித்துள்ளார்.

உதயா
இதையடுத்து நடிகர் உதயா, லாரன்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கும், நடன கலைஞர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் மற்றும் அமைப்புசாரா மற்ற தொழிலாளர்களுக்கும் ரூ.3 கோடியை வாரி வழங்கியது மட்டுமில்லாமல், இன்னும் நிதியுதவி வழங்கி வருகிறார் லாரன்ஸ்.

நலிந்த நடிகர்கள்
நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நலிந்த நடிகர்கள், நாடக நடிகர்களுக்கு ரூபாய் 25 லட்சத்தை அளித்திருக்கிறார். அதன்மூலம் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். இக்கட்டான சூழ்நிலையில் உதவுவதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது. கொடுக்கும் மனம் இருக்கவேண்டும். திரைத்துறையை சார்ந்தவர்களின் குடும்பங்களில் விளக்கேற்றி வைத்த, அவருக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











