லாரன்ஸுக்கு எவ்வளவு பெரிய மனசு.. கரையான் அரித்த பணம்.. கதறிய பெண்.. ஓடி சென்று உதவி செய்த மாஸ்டர்
சென்னை: தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் லாரன்ஸ். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் லாரன்ஸின் நடிப்பும் அட்டகாசமாகவே இருந்தது. இதற்கிடையே லாரன்ஸ் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். அது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் ஏழை பெண் ஒருவருக்கு அவர் செய்த உதவி பலரிடமும் பாராட்டை பெற்றிருக்கிறது.
சினிமாவில் கிடைத்த வேலைகளை செய்தவர் ராகவா லாரன்ஸ். அப்படித்தான் சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயனிடம் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த் அவரை டான்ஸ் யூனிட்டில் சேர்த்துவிட்டார். அதனையடுத்து பல பாடல்களில் க்ரூப் டான்ஸராக நடனத்தில் பின்னியெடுத்தார் லாரன்ஸ். சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் படத்தின் மூலம் நடன அமைப்பாளராகும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர்.

நடிகர் டூ இயக்குநர்: இதனையடுத்து பல படங்களில் நடன அமைப்பாளராக மாஸ் காட்டினார் அவர். அதுமட்டுமின்றி அமர்க்களம், திருமலை உள்ளிட்ட படங்களின் பாடல்களில் தோன்றி நடனம் ஆடிய லாரன்ஸ் அற்புதம் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். அவர் ஹீரோவாக அறிமுகமாகும்போது அவரது உருவத்தையும், நிறத்தையும் வைத்து ஒரு தயாரிப்பாளர் கிண்டலும் அடித்தார். ஆனால் தன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
கோலிவுட்டில் இயக்குநராக லாரன்ஸ்: தெலுங்கில் இயக்கிய படம் ஓரளவுக்கு வெற்றியை பெற அடுத்ததாக தமிழில் முனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து காஞ்சனா சீரிஸை இயக்கிய அவருக்கு காஞ்சனாவும், காஞ்சனா 2வும் மெகா ஹிட்டை கொடுத்தது. கடைசியாக அவரது நடிப்பில் ஜிகர்தண்டா 2 வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக அவரது நடிப்பில் பென்ஸ், கால பைரவா, காஞ்சனா 4 உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. காஞ்சனா 4 படத்தை அவரே இயக்கவும் செய்கிறார்.
உதவி: லாரன்ஸ் நடிப்போடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். பல சிறுவர்களின் படிப்புக்கு ஃபீஸ் கட்டுவது, பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருவது என பலரது பாராட்டை பெற்றிருக்கிறார். அவர் தத்து எடுத்து படிக்க வைத்த பலர் இன்று நல்ல பணியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உதவி செய்யும் குணம் பலரிடம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது அதிக உதவிகளை செய்துவரும் கலக்கப்போவது யாரு பாலாவும் தனது ரோல் மாடல் ராகவா லாரன்ஸ்தான். அவர் சொன்னால் மாடியிலிருந்துகூட குதிப்பேன் என தெரிவித்திருந்தார்.
லாரன்ஸின் இப்போதைய உதவி: இந்நிலையில் லாரன்ஸ் இப்போது செய்திருக்கும் உதவியும் பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. அதாவது, சிவகங்கை மாவட்டம் சுக்கனாம்பட்டியை சேர்ந்த் முத்துக்கருப்பி என்ற பெண் தனது கணவருடன் கூலி தொழில் செய்துவருகிறார். அந்தத் தொழிலில் சம்பாதித்ததை ஒரு தகரா டப்பாவில் போட்டு சிறுக சிறுக சேமித்திருக்கிறார். அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். குழந்தைகளின் காது குத்து நிகழ்ச்சிக்காக அந்த பணம் சேமிக்கப்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்வரை சேர்ந்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவர்கள் இருந்த பகுதியில் பெய்த மழை காரணமாக கரையான் அந்த உண்டியலுக்குள் சென்று பணத்தை அரித்துவிட்டன. தனது பணம் அரிக்கப்பட்டிருப்பதை கண்டு முத்துக்கருப்பி கதறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் கலங்க செய்தது. இதனை கவனித்த லாரன்ஸ் உடனடியாக அந்தப் பெண்ணை சென்னைக்கு வரவழைத்து ஒரு லட்சம் ரூபாயை தந்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ லாரன்ஸுக்கு தங்களது பாராட்டினை தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











