26 சட்டமன்ற தேர்தலில் மும்முனை பேட்டி.. ரசிகர்களை தேடி விஜய் வருவார்.. லெஜண்ட் சரவணன் பேட்டி!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் தீவிரமான மும்முனைப் போட்டியாக இருக்கும், ரசிகர்கள் விஜய்யை தேடி சென்று கொண்டிருந்தார்கள் இனி ரசிகர்களை தேடி விஜய் வருவார் என்று லெஜண்ட் சரவணன் பேட்டியில் கூறியுள்ளார்.
தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், தனது கடையின் விளம்பரத்தில் நடித்து வந்த நிலையில் திடீரென கதாநாயகன் அவதாரம் எடுத்தார் ஜெர்ரி & ஜேடி ஆகியோர் இயக்கிய தி லெஜண்ட் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. டான்ஸ், சண்டை என அனைத்திலும் மனுஷன் பின்னி பெடல் எடுத்திருந்தார். தியேட்டரில் வெளியான தி லெஜண்ட் திரைப்படம் 20 கோடி வரை வசூலித்தது.

செய்தியாளர் சந்திப்பு: தி லெஜண்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எதிர்நீச்சல், கொடி, பட்டாஸ், கருடன் போன்ற பல வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது. இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விமானம் மூலம் சென்னை வந்த லெஜண்ட் சரவணன் செய்தியாளர்களிடம் பேசினார்,
இரண்டாவது படமும் வெற்றிதான்: படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தூத்துக்குடி துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.படத்தின் பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையில் வெளியாகும் என்றார். மேலும், அண்மையில் வெளியான மகாராஜா, டிமான்டி காலனி, கருடன் போன்ற படங்கள் நல்ல கதை அம்சத்தை கொண்டவையாக இருந்ததால், மக்களிடம் அந்த படத்திற்கு வரவேற்பு அதிகமான இருந்தது. அது போன்ற ஒரு கதையில் தான் நான், நடித்து வருகிறேன். என்னுடைய படம் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இருக்கும், என் முதல் படம் வெற்றி படம் இரண்டாவது படமும் மிகப் பெரிய வெற்றி படமாக அமையும்.என்றார்.
மும்முனை போட்டி: விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில், மும்முனை போட்டி நிலவும், சரியான கூட்டணி அமைப்பவர்களே வெற்றி பெற முடியும். தனித்து யாரும் வெற்றி பெற முடியாது. காலம் இருக்கிறது அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்னுடைய கொள்கைக்கு ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ரசிகர்கள் விஜய்யை தேடி சென்று கொண்டிருந்தார்கள் இனி ரசிகர்களை தேடி விஜய் வருவார் என்றார். மேலும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவு, ஜிஎஸ்டி என பல விஷயம் குறித்து பேசினார்.


Click it and Unblock the Notifications











