கால் விரல்களை இழந்து தவித்த பாவா லட்சுமணன்.. ஓடிவந்து உதவிய 'லெஜண்ட்' சரவணன்!
சென்னை: தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களைத் தனது தனித்துவமான குரலால் சிரிக்க வைத்தவர் நடிகர் பாவா லட்சுமணன். அண்மைய காலமாக இவருக்குச் சினிமா வாய்ப்புகள் இல்லாததால் கடுமையான வறுமையில் வாடி வந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த கண்ணீர் பேட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
3 விரல்களை எடுத்துட்டாங்க: கொஞ்ச நாளைக்கு முன்னாடி கர்நாடகாவுல ஒரு தேர்தல் பிரச்சாரத்துக்குப் போயிருந்தப்போ, எதிர்பாராத விதமா அங்கே இருந்த ஜெனரேட்டர் மேல கால் வச்சுட்டேன். அப்போ எனக்கு வலி எதுவும் தெரியல. ஆனா, 10 நாள் கழிச்சு கால் பயங்கரமா வீங்கிடுச்சு. ஆஸ்பத்திரியில காட்டியப்போ, இன்பெக்ஷன் ரொம்ப அதிகமாயிடுச்சு, உடனே ஆபரேஷன் பண்ணி 3 விரல்களையும் எடுக்கணும்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. வேற வழி இல்லாம விரல்களை எடுத்துட்டேன். விரல்களை எடுத்ததால் என்னால இப்போ நடக்க முடியல. சாப்பாட்டுக்கும் மருத்துவச் செலவுக்கும் கூட காசு இல்லாம, நான் பிச்சை எடுக்குற நிலைமையில தான் இப்போ இருக்கேன். இப்போ இருக்கிற வீட்டையும் உடனே காலி பண்ண சொல்லிட்டாங்க. என்னோட இந்த சூழ்நிலைக்கு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் எனக்கு ஏதாச்சும் உதவி செய்தா ரொம்ப நல்லா இருக்கும் என விம்மி அழுதபடி பேசி இருந்தார்.

லெஜண்ட் சரவணனின் மனிதாபிமானம்: பாவா லட்சுமணனின் இந்த உருக்கமான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அதைப் பார்த்த தொழிலதிபரும் நடிகருமான 'லெஜண்ட்' சரவணன் உடனடியாக மனிதாபிமானத்தோடு உதவ முன்வந்துள்ளார். லெஜண்ட் சரவணனின் உத்தரவின் பேரில், அவருடைய உதவியாளர்களுடன் பிரபல நடிகர் கூல் சுரேஷ், பாவா லட்சுமணனின் வீட்டுக்கே நேரில் சென்றுள்ளார். அங்கே அவரிடம் லெஜண்ட் சரவணன் வழங்கிய 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்துள்ளார். எதிர்பாராத இந்த உதவியால் அதிர்ந்து போன பாவா லட்சுமணன், நான் லெஜண்ட் சரவணன் சார் படத்துல இதுவரைக்கும் நடிச்சது இல்லை. ஏன்... அவரை நான் நேர்ல பார்த்தது கூட இல்லை. அப்படி இருந்தும், நான் கஷ்டப்படுவதைப் பார்த்துட்டு மனசு தாங்காம ஓடிவந்து எனக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில உதவி செஞ்சிருக்காரு. இதை என் வாழ்நாளில் நான் எப்பவுமே மறக்க மாட்டேன் என்று கண்ணீர் விட்டு பேசி உள்ளர்


Click it and Unblock the Notifications