கொரோனா வைரஸ் பாதிப்பு.. கணவர் இறந்த நிலையில் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு தீவிர சிகிச்சை!
சென்னை: கணவர் இறந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஏ.எல்.ராகவன், ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

எங்கிருந்தாலும் வாழ்க
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் 'எங்கிருந்தாலும் வாழ்க' போன்ற காலத்தால் அழியாத பல பாடல்களை பாடி இருக்கிறார். பொம்பளை ஒருத்தி இருந்தாளாம், சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, அங்கமுத்து தங்கமுத்து உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளர். சில படங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

நடிகை எம்.என்.ராஜம்
இவர் மனைவி, பிரபல நடிகை எம்.என்.ராஜம். சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது இருவருக்குமே கோவிட் -19 இருந்தது உறுதியானது. இருவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன.

தீவிர சிகிச்சை
இந்நிலையில் ஏ.எல்.ராகவனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து இன்று காலை உயிரிழந்தார். இது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரத்தக் கண்ணீர்
நடிகை எம்.என்.ராஜம், எம்.ஆர்.ராதாவின் ரத்தக் கண்ணீர், சிவாஜியின் ரங்கூன் ராதா, புதையல், பாசமலர், எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், பாக்தாத் திருடன் உட்பட பல கிளாசிக் படங்களில் நடித்துள்ளார். வின்னர் படத்தில் பிரசாந்த் பாட்டியாகவும் கடைசியாக மருதமலை படத்தில் நிலாவின் பாட்டியாகவும் நடித்திருந்தார். தமிழ் தவிர, தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார் இவர்.


Click it and Unblock the Notifications











