தொடரும் சோகம்.. கல்யாண ராமனையும் கடல் மீன்களையும் தந்த இயக்குநர் ஜி.என் ரங்கராஜன் காலமானார்
சென்னை: தமிழ் சினிமா உலகின் தொண்டையை துக்கம் தினமும் அடைத்து வருகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்யாண ராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா என பல நல்ல படங்களை இயக்கிய இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90.
பழம்பெரும் இயக்குநரான ஜி.என். ரங்கராஜன் மறைவு சினிமா உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறியுள்ளது.

தொடரும் சோகம்
நடிகர் விவேக், பாண்டு, கே.வி. ஆனந்த், வெங்கட் சுபா என ஏகப்பட்ட பிரபலங்கள் கடந்த சில மாதங்களாக காலமாகி வருவது தமிழ் சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், பழம்பெரும் இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் இன்று இவ்வுலகை விட்டு நீங்கியுள்ளது சினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஜி.என். ரங்கராஜன் காலமானார்
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும் அற்புதமான பல நல்ல படங்களை இயக்கியவருமான ஜி.என். ரங்கராஜன் இன்று காலை 8.45 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90. உடல் நலக் குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக அவர் இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவுக்கு திரைத் துறையினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கல்யாணராமன்
உலகநாயகன் கமல்ஹாசனின் கல்யாணராமன், கடல் மீன்கள், மகராசன் மற்றும் மீண்டும் கோகிலா என சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ஜி.என். ரங்கராஜன். மேலும், அடுத்தது ஆல்பர்ட், ராணி தேனி, கரையெல்லாம் செண்பகப் பூ, மனக்கணக்கு, முத்து எங்கள் சொத்து உள்ளிட்ட படங்களையும் இவர் இயக்கி உள்ளார்.

மகனும் இயக்குநர்
ஜி.என். ரங்கராஜனின் மகன் குமரவேலனும் தமிழ் சினிமா இயக்குநர் தான். பாலுமகேந்திரா பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்ட இவர், 2009ம் ஆண்டு வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்கி உள்ளார். மேலும், யுவன் யுவதி என்கிற படத்தையும் இயக்கி உள்ளார்.

பிரபலங்கள் இரங்கல்
பழம்பெரும் லெஜண்டரி இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜி.என். ரங்கராஜனின் மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகமும் இரங்கல் தெரிவித்து வருகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











