மகனின் பிரிவு.. மைசூருவில் பிரிந்த உயிர்.. இசை உலகின் நிலா மறைந்தது.. ஜானகியின் வாழ்க்கை வரலாறு
சென்னை: தென்னிந்தியத் திரையுலகின் 'தெய்வீகக் குரல்' என்று வர்ணிக்கப்படும் மூத்த பாடகி எஸ். ஜானகி இன்று உயிரிழந்தார். மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை இன்று அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு 7.30 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரது மறைவை அவரது பேத்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
பழம்பெரும் பாடகி எஸ் ஜானகி1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி, அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள பள்ளபட்லா என்ற கிராமத்தில் செஸ்லா ராமமூர்த்தி, சத்யவதி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஆவார். தந்தையின் பணி நிமித்தமாக இவர்களது குடும்பம் ராஜமுந்திரிக்கு இடம்பெயர்ந்தது. அங்கு ஒரு பிரபல நாதஸ்வர வித்துவானிடம் இசை கற்றுக்கொண்ட ஜானகி, பின்னர் 'ஆல் இந்தியா ரேடியோ' நடத்திய அகில இந்திய அளவிலான பாடல் போட்டியில் கலந்துகொண்டு, அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் முதல் பரிசைப் பெற்றார்.

ஜெமினி டூ அனிருத்: சந்திரசேகரன் என்பவர் நடத்தி வந்த கலை நிகழ்ச்சிகளில் பாடி வந்த ஜானகி, அவரது மகன் வி. ராம்பிரசாத்தைக் காதலித்து 1959-ல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின், ஜானகியின் திறமையைக் கண்டு அவரது மாமனார் சந்திரசேகர் புகழ்பெற்ற 'ஜெமினி' நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதன்பின் தான், ஜெமினி நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் பாடகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜானகி. 'விதியின் விளையாட்டு' என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். பி.பி. ஸ்ரீனிவாஸுடன் இணைந்து அவர் பாடிய டூயட் பாடல்கள் மெகா ஹிட்டாகின.
கடைசி பாடல்: குறுகிய காலத்திலேயே புகழ் அடைந்த ஜானகி, எஸ்.எம். சுப்பையா நாயுடு, கே.வி. மகாதேவன், எம்.எஸ். விஸ்வநாதன் தொடங்கி இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், ஸ்ரீகாந்த் தேவா மற்றும் இன்றைய தலைமுறை இசையமைப்பாளர் அனிருத் வரை அனைத்து தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிய பெருமை ஜானகி அம்மாவிற்கு உண்டு. 2016-ல் ஸ்ரீகாந்த் தேவா இசையில் வெளியான 'திருநாள்' படத்தில் பாடியதே இவரது கடைசிப் பாடலாகும்.

விருதுகள்: தனது 6 தசாப்த காலத் திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட 17-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் கிட்டத்தட்ட 80,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். இவரது அசாத்திய திறமைக்காக 4 தேசிய விருதுகளையும், தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில அரசுகளிடம் இருந்து 33-க்கும் மேற்பட்ட மாநில விருதுகளையும், கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு தனக்கு அறிவிக்கப்பட்ட 'பத்மபூஷன்' விருதை, எனக்கு மிகவும் தாமதமாகக் கொடுக்கப்பட்ட விருது என்று கூறி கம்பீரமாக நிராகரித்து தனது சுயமரியாதையை நிலைநாட்டினார்.
மகனின் பிரிவு: கடந்த ஜனவரி மாதம், ஜானகியின் ஒரே மகனான முரளி கிருஷ்ணா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். முதுமை காலத்தில் தனக்குத் துணையாக இருப்பான் என்று நினைத்த மகனைப் பறிகொடுத்துவிட்டு, தள்ளாத வயதில் மனவேதனையுடன் தவித்து வந்த ஜானகி அம்மாள், இன்று மைசூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வயது மூப்பு காரணமாகக் காலமானார். அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.


Click it and Unblock the Notifications