பாடகி ஆஷா போஸ்லேவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!
மும்பை: புகழ் பெற்ற பாடகி ஆஷா போஸ்லே ஏப்ரல் 12ந் தேதி வீட்டில் இருந்த போது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலன் அளிக்காமல் உடல் உறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
ஆஷா போஸ்லே உயிரிழந்ததை அடுத்து அவரது மகன் ஆனந்த் போஸ்லே செய்தியாளர்களிடம், ஆஷா போஸ்லேவின் உடல், லோயர் பரேலில் உள்ள 'காசா கிராண்டே' இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். மாலை 4 மணி அளவில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றார். இதையடுத்து நேற்று முதல், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவரும் ஆஷா போஸ்லேவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து பிற்பகல் 4 மணி அளவில் சிவாஜி பூங்காவில் உள்ள மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தேசிய கொடி போர்த்தப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

பாடகி ஆஷா போஸ்லே: மகாராஷ்டிர மாநிலம் சாங்லியில், 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ந் தேதி பிறந்த ஆஷா, தனது தந்தையான தீனநாத் மங்கேஷ்கரிடம் இசையைக் கற்கத் தொடங்கினார். நான்கு சகோதரிகளில், லதா, உஷா மற்றும் ஆஷா ஆகியோர் பின்னணிப் பாடகிகளாகத் திகழ்ந்தனர். ஆஷா தனது 10வயதில், 'மாஜா பால்' (Majha Bal) என்ற மராத்தித் திரைப்படத்திற்காக முதல் முதல் பாடலை பாடினார்.' எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக சுமார் 12,000 பாடல்களை பாடி உள்ளார். தாதாசாகேப் பால்கே விருது, பத்ம விபூஷன், தேசிய விருது என பல விருதுகளை வென்றுள்ளார்.
16 வயதில் திருமணம்: ஆஷா தனது 16 வயதில், தனது சகோதரி லதா மங்கேஷ்கரின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய கணபத்ராவ் போஸ்லேவை திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்த ஆஷா கணவரை விட்டுப் பிரிந்து, தனது தாய்வீட்டிற்குத் திரும்பினார். அதன் பின்1980 ஆம் ஆண்டு, இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனைத் திருமணம் செய்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











