Asha Bhosle Death: “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி“ மறைந்தார் பிரபல பாடகி ஆஷா போஸ்லே
சென்னை: புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் உயிரிழந்தார். அவருக்கு வயது 92. அவரின் இறுதி சடங்கு திங்கட்கிழமை மும்பை சிவாஜி பார்க்கில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மாரடைப்பு மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக மும்பையில் உள்ள பீச் கேன்டி மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சற்று முன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து ஆஷா போஸ்லேவின் மகன் ஆனந்த் போஸ்லே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஷா இன்று உயிரிழந்தார். அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் நாளை காலை 11 மணியில் வைக்கப்பட உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகி: பாடகி ஆஷா போஸ்லே1933ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி இசைக்கலைஞரான பண்டிட் தீனநாத் மங்கேஷ்கருக்கு மகளாகப் பிறந்தார். தனது 9 வயதிலேயே தந்தையை பறிகொடுத்தார். இதனால் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, அவரது மூத்த சகோதரி லதா மங்கேஷ்கரும் திரைப்படங்களில் பாடத் தொடங்கினர். 'மஹல்' திரைப்படத்தில் அவர் பாடிய 'ஆயேகா ஆனேவாலா' பாடல் அவரை புகழின் உச்சுக்கு கொண்டு சென்றது. தனது சகோதரிப்போல இசையின் மீது ஆர்வம் கொண்ட ஆஷா, 1943 ஆம் ஆண்டில், Chala Chala Nav Bala என்ற மாராத்திய பாடலைப் பாடி திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கினார்.
விருதுகள்: ஆஷாவின் மாய குரல் ஜாலத்திற்கு மயங்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக மிகச் சிறந்த பாடகியாக திகழ்ந்து வருகிறார். இதுவரை 20 மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார். அவர், கச்சேரி, கஜல், பாப், நாட்டுப்புறம் போன்ற பலவற்றிலும் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தார். 9 ஃபிலிம்பேர் விருதுகள், 2 தேசியத் திரைப்பட விருதுகள், அதிக எண்ணிக்கையிலான பாடல்களை பாடியதற்காக 2011 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரத்தைப் பெற்றார்.
ஹிட் பாடல்கள்: பாடகி ஆஷா போஸ்லே இளையராஜா இசையில் 1987ஆம் ஆண்டு வெளியான 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தில் இடம் பெற்ற "செண்பகமே செண்பகமே..." என்ற பாடலை பாடினார். தமிழ் திரையிசை பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இதைத்தொடர்ந்து "நீ பார்த்த பார்வைக்கு ஓர் நன்றி", "ஓ...பட்டர்பிளை", "வளையோசை", எங்கெங்கே... எங்கெங்கே இன்பம்" என பல பாடல்களை பாடிய இவர். ஏஆர் ரஹ்மான் இசையில் அலைபாயுதே படத்தில் "செப்டம்பர் மாதம் செப்டம்பர்", "வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதல் காதல்" என ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.
காதல் திருமணம்: தனது 16 வயதில், தனது சகோதரி லதா மங்கேஷ்கரின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய 31 வயதான கணபத்ராவ் போஸ்லேவை குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். ஆனால், காதல் திருமண வாழ்க்கையில் மிகுந்த துன்புறுத்தல்களை சந்தித்த ஆஷா, மூன்றாவது குழந்தையைச் சுமந்துகொண்டிருந்தபோதே கணவரை விட்டுப் பிரிந்து, தனது தாய்வீட்டிற்குத் திரும்பினார். அதன் பின்1980 ஆம் ஆண்டு, இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனைத் திருமணம் செய்துகொண்டார். காலத்தால் அழியாத பல பாடல்கள் மூலம் ஆஷா போஸ்லே இந்திய இசையில் அழியாத தடம் பதித்துள்ளார். அவரது மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இணையத்தில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











