அதிர்ச்சி.. பாடகி ஜானகி அம்மாவின் மகன் மரணம்.. ரொம்ப இடிஞ்சு போய்ட்டாங்க.. எப்படி தாங்க போறாங்களோ?
சென்னை: இந்திய திரையிசையில் தவிர்க்க முடியாத பின்னணி பாடகி ஜானகி. தென்னிந்திய நைட்டிங்கேல் என்று ரசிகர்களால் புகழப்படும் அவருக்கு இப்போது வயது 87 ஆகும். ஜானகி அம்மாவுக்கு முரளி கிருஷ்ணா என்ற மகன் உண்டு. தனது மகன் மீது அபரிமிதமான பாசம் வைத்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஜானகிக்கு இடி போல் இறங்கியிருக்கிறது. பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் எஸ்.ஜானகி. இவரது தந்தை ஒரு ஆயுர்வேத மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜானகிக்கு 20 வயது இருக்கும்போது அவரது குடும்பம் சென்னைக்கு வந்துவிட்டது. ஜானகிக்கு சிறு வயது முதலே பாடுவதில் ஆர்வம் இருந்ததால் முறையாக சங்கீதம் கற்றுக்கொண்டார். அதனையடுத்து சினிமாவில் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன்படி விதியின் விளையாட்டு என்ற படத்தில் பாடகியாக அறிமுகமானார்.
அன்னக்கிளி உன்னை தேடுதே: தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடிக்கொண்டிருந்த ஜானகி இளையராஜாவின் இசையில். அன்னக்கிளி படத்தில், 'அன்னக்கிளி உன்னை தேடுதே' என்று அவர் பாடியதை கேட்ட ரசிகர்கள் இன்றுவரை அந்த அன்னக்கிளியை மறக்காமல் தங்கள் காதுகளின் கூடுகளுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அந்தப் பாடல்தான் இளையராஜா இசையமைத்த முதல் பாடல் என்பது நினைவுகூரத்தக்கது. இளையராஜாவுக்கு ஜானகி பாடிய முதல் பாடலே பட்டித்தொட்டியெங்கும் இன்பத்தேனை பாய்ச்சியது.

வெகு பிரபலம்: தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்கள் பாடினார். ஜானகியின் பாடல்கள் அத்தனையும் ஹிட்டாகின. இதன் காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் வெகு பிரபலமானார் ஜானகி. பல இசையமைப்பாளர்களுக்கு பாடல்கள் பாடியிருக்கும் அவரை தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று ரசிகர்களால் புகழப்படுகிறார். அவருக்கு இப்போது 87 வயது ஆகும். இப்போதும் அவரது குரல் மழலை குரல் போன்றே இருக்கும் என அவரது ரசிகர்கள் சொல்வதுண்டு.
ஜானகியின் குடும்பம்: இதற்கிடையே ராம் பிரசாத் என்பவரை கடந்த 1959ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு முரளி கிருஷ்ணா என்ற மகனும் பிறந்தார். சூழல் இப்படி இருக்க கடந்த 1997ஆம் ஆண்டு ராம் பிரசாத் மரணமடைந்தார். கணவரின் மரணத்துக்கு பிறகு மகனின் மீது ஜானகிக்கு இருந்த பாசம் பன்மடங்கு அதிகரித்தது. இந்நிலையில் அவரது வாழ்க்கையில் இன்னொரு இடி இறங்கியிருக்கிறது.
மகன் மரணம்: அதாவது ஜானகியின் மகனான முரளி கிருஷ்ணா இன்று காலை உயிரிழந்துவிட்டார். அவருக்கு 65 வயது இருக்கும் என கூறப்படுகிறது. முரளியின் மரணம் குறித்து பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தனது முகநூல் பக்கத்தில், "ஜானகி அம்மாவின் அன்புக்குரிய ஒரே மகன் முரளியின் மரண செய்தியை இன்று காலை கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அன்பான சகோதரரை இழந்துவிட்டோம். இந்த தாங்க முடியாத வேதனையையும், துயரத்தையும் கடந்து செல்ல ஜானகி அம்மாவுக்கு இறைவன் மன பலத்தை கொடுக்க வேண்டும். மறைந்த ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி" என்று குறிப்பிட்டிருக்கிறார். மகனின் மறைவு ஜானகி அம்மாவை நிலைகுலைய செய்திருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இந்த மறைவை கேள்விப்பட்ட பிறகு பலரும் ஜானகிக்கு ஆறுதல் கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











