சப்பாணியையும் பரட்டையையும் செதுக்கிய மாமேதை.. பாரதிராஜாவின் திரையுலக சாதனை
சென்னை: தமிழ் சினிமாவை ஸ்டுடியோ செட்களுக்குள்ளிருந்து கிராமத்து மண்வாசனைக்குக் கூட்டிச் சென்ற மாபெரும் கலைக் குறியீடு, 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகையும், கோடிக்கணக்கான சினிமா ரசிகர்களையும் துயரத்தில் மூழ்கடித்துள்ளது.
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் 1941 ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி பெரியமாயத்தேவர் - மீனாட்சி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் பாரதிராஜா. இவரது இயற்பெயர் சின்னசாமி. சினிமா மீது கொண்ட அதீத மோகத்தால் சென்னைக்கு வந்த இவர், ஆரம்பத்தில் பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகல், எம்.கிருஷ்ணன் நாயர், அவிநாசி மணி மற்றும் ஜெயகாந்தன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து சினிமா நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.

16 வயதினிலே: 1977ஆம் ஆண்டு, அதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு பிரம்மாண்ட புரட்சியைத் தனது முதல் படத்திலேயே நிகழ்த்திக் காட்டினார் பாரதிராஜா. அதுதான் '16 வயதினிலே'. பெண்களின் கனவுக் கண்ணனாக, ஸ்டைலிஷ் ஹீரோவாக வலம் வந்த உலக நாயகன் கமல்ஹாசனை 'சப்பாணி' என்ற கதாபாத்திரத்தில் மொட்டை அடித்து, அழுக்கு லுக்கில் நடிக்க வைத்தார். சாக்லேட் பாயாக இருந்த ரஜினிகாந்த்தை 'பரட்டை' என்ற மிரட்டலான வில்லனாக மாற்றிக் காட்டினார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் பாரதிராஜா.
'மண்வாசனை' தந்த மாமேதை: அதுவரைக்கும் நான்கு சுவற்றுக்குள்ளும், செயற்கை செட்களுக்குள்ளும் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை, கேமராவைத் தூக்கிக்கொண்டு கிராமத்து வயல்வெளிகளுக்கும், ஆலமரத்து நிழல்களுக்கும் கூட்டிச் சென்ற பெருமை பாரதிராஜாவையே சேரும். கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், மண்வாசனை, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை என அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் படங்களும் காலத்தால் அழியாத காவியங்கள். கிராமத்து எதார்த்தம், சுண்டி இழுக்கும் மண்வாசனை, இளையராஜாவின் இசை என இவர்களது கூட்டணி தமிழ் சினிமாவின் பொற்காலமாக அமைந்தது.
நட்சத்திரங்களை உருவாக்கிய பல்கலைக்கழகம்: தமிழ் சினிமாவிற்கு ஏராளமான புதுமுகங்களை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, வடிவு கரசி, என் உயிர் தோழன் ரமா, நடிகர்கள் கார்த்திக், பாக்யராஜ், மணிவண்ணன், உன் உயிர் தோழன் பாபு, மண்வாசனை பாண்டியன் என இவர் அறிமுகப்படுத்திய அனைவரும் பிற்காலத்தில் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்து உயர்ந்தனர். இயக்குநராக மட்டுமல்லாமல், பிற்காலத்தில் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துத் தனது நடிப்புத் திறமையையும் நிரூபித்திருந்தார்.
பத்மஸ்ரீ முதல் தேசிய விருதுகள் வரை: இவரது அசாத்திய கலைச் சேவைக்காக இந்திய அரசு இவருக்கு நாட்டின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ' வழங்கி கௌரவித்தது. இதுதவிர 6 தேசிய விருதுகள், தமிழக அரசின் உயரிய 'கலைமாமணி' விருது, பிலிம் பேர் விருது எனப் பல நூறு விருதுகளைத் தன்வசப்படுத்தி விருதுகளுக்கே பெருமை சேர்த்தார்.

மகன் மறைவு சோகம்: பாரதிராஜா சந்திரலேகா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மனோஜ் மற்றும் ஜனனி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தனது மகன் மனோஜை, 'தாஜ்மஹால்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். மனோஜ் தொடர்ந்து சில படங்களில் நடித்தார் மற்றும் நடிகை நந்தனாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மகன் மனோஜ் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். வாலிப மகனின் இந்தத் திடீர் மறைவு பாரதிராஜாவைத் தீரா சோகத்தில் ஆழ்த்தியது. மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் மனதளவில் உடைந்த பாரதிராஜாவின் உடல்நலமும் அடியோடு பாதிக்கப்பட்டது.
இமயம் சரிந்தது: கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு காரணமாகப் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறி சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், இன்று அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார். "என் இனிய தமிழ் மக்களே" என்று காந்தக் குரலில் கம்பீரமாக ஒலித்த அந்த இயக்குநர் இமயத்தின் குரல் இன்றுடன் ஓய்ந்தது. தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தங்களது ஆழந்த இரங்கல்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்


Click it and Unblock the Notifications