அதிகாரம் இழந்த வெறியில்.. திமுக தன்னைத் தானே தோலுரித்து காட்டிக் கொண்டிருக்கிறது.. பிரபலம் விளாசல்
சென்னை: நடிகர் விஜய்யில் தொடங்கி, தவெக தலைவர் விஜய்யாக மாறி, தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் உருவெடுத்திருப்பது என்பது திரைத்துறையில் மட்டும் இல்லாமல் அரசியல் தளத்திலும் பெரும் பரபரப்பு தான். அதுவும் கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது எல்லாம் இதற்கு முன்னர் யாருமே செய்யாதது. இப்படி இருக்கையில் ஆட்சியில் இருந்த திமுகவை எதிர்த்து அரசியல் பிரசாரங்களை மேற்கொண்டது மட்டும் இல்லாமல், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் திமுக கூட்டணிக் கட்சிகளை திமுகவிடம் இருந்து லாவகமாக பிடித்து விட்டார்.
திமுக கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து தவெக கூட்டணியை மேலும் பலப்படுத்தி திமுகவை அரசியல் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட தோற்றத்தை உருவாக்கி விட்டது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் திமுகவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்து தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற கட்சிகள் குறித்து திமுக முன்னணி பொறுப்பாளர்கள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் என பலரும் மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

அதிகாரம் இழந்த வெறி: இது தொடர்பாக இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் தளத்தில் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார். அதாவது, " அதிகாரம் இழந்த வெறியில் இன்னும் இன்னும் ஆழமாக தனது அசலான அதிகார வெறி கொண்ட அருவருப்பான தன்மையை நன்றாகப் பாருங்கள் என்று தன்னைத்தானே தோலுரித்து காட்டிக் கொண்டிருக்கிறது திமுக" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது பேசு பொருளாக மாறியது மட்டும் இல்லாமல், திமுகவினர் மீது பலரும் தற்போது முன் வைக்கும் விமர்சனமாகவும் உள்ளது.
இது ஒரு புறம் இருக்க அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்பெல்லாம் இருந்த அமைச்சரவையை காட்டிலும் அதிக அளவில் இடம் கொடுத்திருப்பதை இயக்குநர் பா. ரஞ்சித் பாராட்டி உள்ளார்.

பாராட்டிய பா. ரஞ்சித்: இது தொடர்பாக பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், " தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
தொடக்கம்: பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூக நீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல் நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
முன் உதாரணம்: இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும் போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய் பீம்!" என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications