Leo Update: லியோவில் தனுஷ்..? வாய்ப்பே இல்ல ராசா... இந்த அப்டேட்லாம் அதுக்காக மட்டும் தான்!
சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படம் அக்டோபரில் வெளியாகிறது.
மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் லியோவில் ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இவர்களும் போதாதென்று நடிகர் தனுஷும் கேமியோ ரோலில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், அதெல்லாம் வதந்தி என்றும், அதற்கான காரணம் குறித்தும் தற்போது தெரியவந்துள்ளது.

லியோவில் தனுஷ் நடிக்க வாய்ப்பே இல்லை:விஜய்யின் 67வது படமாக உருவாகி வரும் லியோ, அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. கடந்த ஜனவரியில் தொடங்கிய லியோ ஷூட்டிங், இந்த மாதத்திற்குள் நிறைவுபெறும் என சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தை 7 ஸ்க்ரீன்ஸ் பேனரில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்திற்குப் பின்னர் விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநகரம் முதல் லோகேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான 4 படங்களுமே மல்டி ஸ்டார்ஸ் காஸ்டிங் தான். அதேபோல் இப்போது உருவாகும் லியோ படத்திலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை முன்னணி நடிகர்களே நடித்து வருகின்றனர். பாலிவுட்டில் இருந்து சஞ்சய் தத், அனுராக் காஷ்யப், கோலிவுட்டில் இருந்து த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின் என வாக்காளர் பட்டியல் போல இன்னும் இரண்டு தொகுதிக்கு நடிகர்கள் இணைந்துள்ளனர்.
இவர்களும் போதாது என அன்-அபிஸியலாக இன்னும் எத்தனை நடிகர்களை லியோ என்ற LCU குடோனில் அடைத்து வைத்துள்ளாரா லோகேஷ். டைட்டில் கார்ட் போட நேரமில்லாமல், எல்லா நடிகர்களின் கழுத்திலும் பெயர் எழுதி போர்டு மாட்டிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனிடையே லியோ படத்தில் தனுஷும் கேமியோ ரோலில் நடிப்பதாக ஒரு ஆட்டோ பாம்-ஐ வீசி ரசிகர்களுக்கு ஒரு திகிலான அப்டேட் கிடைத்துள்ளது.
விஜய் - தனுஷ் இருவரையும் திரையில் ஒன்றாக பார்க்க வேண்டும் என்பது ரசிகர்களின் கனவாக இருந்தாலும், லியோ படத்தில் அதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்ட தனுஷ், அடுத்து அவரது 50வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D 50 என்ற டைட்டிலில் உருவாகும் இப்படத்தை தனுஷே இயக்கி வருகிறார்.
D 50 படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டதால் தனுஷ் அதில் பிஸியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவர் எப்படி லியோவில் கமிட்டாவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல், லியோ படப்பிடிப்பும் இன்னும் ஓரிரு தினங்களில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. அப்படியிருந்தும் லியோ படத்தில் தனுஷ் நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி என்றே தெரிய வந்துள்ளது.
லியோ படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தவே இதுபோன்ற தில்லாலங்கடி அப்டேட்ஸ் வெளியாவதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் ப்ரீ-தியேட்டர் பிஸினஸ் உட்பட மற்ற வியாபாரங்களும் இதனால் சூடுபிடிக்கும் என படக்குழு எதிர்பார்க்கிறதாம். முக்கியமாக விஜய் - தனுஷ் இருவருமே ஒருவரைப் பற்றி இன்னொருவர் அதிகம் பேசிக் கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் லியோ படத்தில் தனுஷ் நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











