Leo Audio Launch: லியோ இசை வெளியீட்டு விழாவில் திடீர் மாற்றம்... விஜய் எடுத்த அதிரடி முடிவு!
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. ஏற்கனவே விஜய் பிறந்தநாளில் 'நான் ரெடி' என ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டு அதிரடி காட்டியது படக்குழு.
அதன் தொடர்ச்சியாக விரைவில் லியோ இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அதில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லியோ இசை வெளியீட்டு விழாவில் திடீர் மாற்றம்: விஜய்யின் 67வது படமாக உருவாகியுள்ள லியோ அக்டோபரில் வெளியாகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லோகேஷுடன் இரண்டாவது முறையாக லியோவில் இணைந்துள்ளார் விஜய். இந்த முறை லோகேஷ் யுனிவர்ஸில் உருவாகியிருக்கும் லியோ, கோலிவுட்டின் மெகா இண்டஸ்ட்ரி ஹிட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், சாண்டி மாஸ்டர் என பெரும் நட்ச்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. அனிருத் இசையில் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளான 'நான் ரெடி' பாடல் விஜய் பிறந்தநாளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாளில் அவர்களது க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.
அதேபோல், தளபதி 67 கவுண்டவுனையும் படக்குழு அபிஸியலாக தொடங்கியது. லியோ ரிலீஸாக இன்னும் 2 மாதங்களே உள்ளதால் மேலும் பல அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே லியோ இசை வெளியீட்டு விழா குறித்த செய்திகளும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. முதலில் தமிழ்நாட்டின் மதுரை, கோவை அல்லது திருச்சி என எதாவது ஒரு நகரில் நடைபெறும் என செய்திகள் வெளியாகின.
விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் அதற்கான முன்னேற்பாடாக லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறும் என சொல்லப்பட்டது. ஆனால், அதன்பின்னர் லியோ இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறலாம் என செய்திகள் வெளியாகின. லியோ இசை வெளியீட்டு விழா ஏற்பாடுகளை தயாரிப்பாளர் லலித் குமார் மலேசியாவில் இருந்து கவனித்து வருவதாகவும் சில புகைப்படங்கள் வெளியாகின.
ஆனால், திடீரென இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி மலேசியாவில் நடக்கவிருந்த லியோ இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இந்த முடிவை விஜய் தான் எடுத்துள்ளதாகவும் லியோ டீமில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணங்கள் என்னவென்று இதுவரை தெரியவில்லையாம்.
இதனையறிந்த சென்னை ரசிகர்கள் விஜய்யின் லியோ இசை வெளியீட்டு விழாவை கொண்டாட ரெடியாகி வருகின்றனர். மேலும் இங்கிருக்கும் ரசிகர்களுக்காக தான் விஜய் இந்த முடிவை எடுத்திருப்பார் எனவும் பேச்சுகள் வலம் வருகின்றன. எப்படி இருந்தாலும் லியோ இசை வெளியீட்டு விழா மேடையில் விஜய்யின் குட்டி ஸ்டோரி செம்ம வைப் கொடுக்கும் என கோலிவுட்டே எதிர்பார்ப்பில் உள்ளது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதற்கான பதிலடியாக விஜய் எதாவது அட்டாக் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











