Leo Blue Sattai Maran Review: "கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதை..” லியோ ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ நேற்று வெளியானது.
300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தரமான ஓபனிங் கிடைத்துள்ளது.
அதேநேரம் லியோ வழக்கமான விஜய் - லோகேஷ் படம் இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் விஜய்யின் லியோ திரைப்படம் "கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதை" என ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.

லியோ ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கூட்டணி லியோவில் இணைந்தது. அதன்படி லலித் குமார் தயாரிப்பில் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக வெளியான லியோ, நேற்று ரிலீஸானது. இந்தப் படம் மூலம் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் விஜய்யும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோவுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.
இந்நிலையில், ப்ளூ சட்டை மாறனின் லியோ விமர்சனம் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. அதில், விஜய்யின் லியோ A History of Violence படத்தோட அபிஸியல் ரீமேக் என டைட்டிலிலேயே லோகேஷ் கூறிவிட்டார். ஹீரோ பார்த்திபன் காஷ்மீரில் ஒரு காஃபி ஷாப் வைத்து தனது குடும்பத்துடன் வாழ்ந்துட்டு வர்றார். அங்க ஒரு ரவுடி கும்பல் பிரச்சினை பண்ண, ஹீரோ விஜய் தற்காப்புக்காக அவங்கள சுட்டுத் தள்ளிடுறாரு.
இந்த சம்பவம் நீதிமன்றம் வரை போக, தற்காப்புக்காக தான் ஹீரோ ரவுடிகளை கொலை பண்ணிருக்கார்ன்னு, கோர்ட்டே பாராட்டி விடுதலை செஞ்சிடுது. இந்த செய்தி பத்திரிகைகள்ல வர்றது பார்த்துட்டு, தெலங்கானால இருக்குற ஒரு கோஷ்டிக்கு அதிர்ச்சியா இருக்குது. இந்த பார்த்திபன் நம்ம இறந்துபோன லியோ மாதிரி இருக்கானே. இவன் தான் அந்த லியோவான்னு சந்தேகப்படுது. இத தெரிஞ்சுக்குறதுக்காக அந்த கோஷ்டி பெரும் படையோடு கிளம்பி காஷ்மீர் வர்றாங்க.
அந்த கோஷ்டி நேரா ஹீரோவோட டீ ஷாப்புக்கு போயி நீ லியோ தானன்னு கேக்குறாங்க. அதுக்கு ஹீரோ விஜய், நான் லியோ இல்ல பார்த்திபன் தான் அவங்ககிட்ட சொன்னாலும், அந்த கோஷ்டி அத நம்புறதா இல்ல. இந்த பிரஷர் அதிகமாக ஹீரோவோட குடும்பத்துக்கு பிரச்சினைன்னும் வரும் போது, விஜய் ஒரு முடிவு எடுக்குறார். அதுக்கு அப்புறம் லியோ யாரு, பார்த்திபன் யாரு... ஏன் இந்த ஆள்மாறாட்டம் என்பது தான் கதை என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.
மேலும், படத்தோட ஃபர்ஸ்ட் ஹால்ஃப் ஓரளவு ஓக்கே ரகமா தான் இருந்தது. இங்கேயே A History of Violence படத்தோட கதை மொத்தமா முடிஞ்சுப்போச்சுன்னு சொல்லலாம். A History of Violence மூவில ஹீரோவுக்கு பெருசா பிளாஷ்பேக் ஸ்டோரி இருக்காது. ஆனா லியோவுல ஹீரோவுக்கு ஒரு ஹிஸ்டரி சொல்றேன்னு சொந்த சரக்க இறக்கி விட்டுருக்கானுங்க. A History of Violence-ல இருக்குற Violence மொத்தத்தையும் ரசிகர்கள் பக்கம் திருப்பிவிட்டனுங்க.
A History of Violence மூவில ஹீரோவ ஒரு அப்பாவியா காட்டுவாங்க. அதனால அவர் வில்லன்களோட மோதும் போது அத பாக்குறதுல ஒரு ஹைப் இருக்கும். ஆனா, லியோ படத்துல ஹீரோ என்ட்ரி ஆகும்போதே யாராலும் கட்டுப்படுத்த முடியாதுன்னு ஓவர் பில்டப் கொடுத்துருக்காங்க. எங்க பிரச்சினைனாலும் உள்ள புகுந்து எத்தனை பேரைனாலும் அடிக்குறார். ஹீரோ யாரை அடிச்சாலும் அவர் உடம்புல காயமே படாது. அதனால ரசிகர்களுக்கும் பிரமிப்பா ஏதும் இல்ல.
முக்கியமா லியோ செகண்ட் ஹால்ஃப்ல எத்தன ஆயிரம் பேர் வந்தாலும் தூக்கிப்போட்டு மிதிக்கிறார். வீடியோ கேம்ல அடிக்குற மாதிரி அடிச்சுப்போட்டு, யார் கூட டயலாக் பேசணுமோ அவங்கள மட்டும் உயிரோட வச்சிருக்கார். அந்த ஒருத்தன்கிட்டயும் பேசி முடிச்சிட்டு போட்டுத் தள்ளிடுறாரு. ஹீரோகிட்ட அடி வாங்குற வில்லன்கள் எல்லாரும் கும்பல் கும்பலா படுத்து கிடக்குறாங்க. அதேபோல் எந்த படமாக இருந்தாலும் வில்லன் கேரக்டர் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்.
ஆனால், லியோவில் வில்லன்கள் யாரும் செட்டாகவே இல்லை. புத்திசாலியா இல்லைனாலும் பரவாயில்லை, எல்லா வில்லன்களும் முட்டாளா இருக்கானுங்க. நரபலி கொடுத்துட்டு வில்லன்னு சொல்றதெல்லாம் சுத்தமா ஒர்க் அவுட் ஆகல. இந்தப் படத்த LCU ஃபேன்ஸ்ன்னு சொல்ற முட்டு பாய்ஸ் என்னலாம் பாடுபடுத்தப் போறாய்ங்களோ. டீ-கோடிங் பண்றேன்னு ஜார்ஜ் கேரக்டர், ரோலக்ஸ் வெப்பன்ஸ்ன்னு சொல்லி என்னலாம் பண்ணப் போறாய்ங்களோ என கலாய்த்துள்ளார்.
மேலும், லியோவில் விக்ரம் படத்தில் இருந்து கமல் கேரக்டர் கெஸ்ட் அப்பீரியன்ஸ் கொடுக்க வச்சிருக்காங்க. இந்த மாதிரியான கேரக்டர்லாம் படத்தையே புரட்டிப் போட்டிருக்க வேண்டும். ஆனா அந்த கேரக்டர் திரும்பி உக்கார்ந்து டப்பிங் மட்டும் கொடுத்துருக்கு. போதையை ஒழிக்க ஒரு ஃபேக்ட்ரிய மட்டும் கொழுத்துணா போதாது, மொத்த ஃபேக்டரியையும் கொழுத்தணும்னு வசனம் மட்டும் பேசுது. ஹீரோவே காஃபி ஷாப் நஷ்டத்துல போகுதேன்னு டென்ஷன்ல இருக்கார். அவருகிட்ட போதையை ஒழிக்க போகலாம்னு கமல் பேசுறதெல்லாம் காமெடியாக இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

லியோவில் ஹைனா கிராபிக்ஸ் சீன் கொஞ்சம் கஷ்டமானது. ஆனால் அதனை நல்லா பண்ணிட்டு மற்ற எல்லாவற்றிலும் சொதப்பிவிட்டதாக கூறியுள்ளார். காஃபி ஷாப் ஃபைட் சீன், குடோனில் ட்ரோன் கேமராவில் ஷூட் செய்யப்பட்ட ஃபைட் சீன் நல்லா இருந்தாலும், கார் சேஷிங் சீன்லாம் வேஸ்ட் எனவும் தெரிவித்துள்ளார். எல்லோருக்கும் நல்ல சம்பளம் கொடுத்துவிட்டு புரொடக்ஷன் வேல்யூ இல்லாமல் லியோவை எடுத்துள்ளதாகவும் ப்ளூ சட்டைமாறன் விமர்சனம் செய்துள்ளார்.
இறுதியாக லோகேஷ் கனகராஜ்ஜை பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதாவது லோகேஷ் கனகராஜ் 10 படங்களுக்கு மேல் இயக்க மாட்டேன் எனக் கூறியிருந்தார். அதனை குறிப்பிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், லியோ லோகேஷின் 5வது படம், இதுவே கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையா தான் இருக்கு. அதுக்கு குறியீடா படத்துலயே கழுதப் புலி கூட இருக்கு. லியோவை பார்க்கும் போதே தெரியுது, இனிமேல் லோகேஷ் கைதி மாதிரி ஒரு படத்தை கொடுத்துடவே மாட்டார்ன்னு நம்பலாம்.
லோகேஷ் லைன்அப்ல அடுத்து ரஜினியின் தலைவர் 171 படம் இருக்கு. தலைவர போடறதுக்கு இப்போதைக்கும் நம்ம ஏரியாவுல இருக்குற ஷார்ப்பான புள்ளிங்கோ லோகேஷ் தான். இதே ஃபார்ம்ல போய்ட்டு தலைவர அட்டாக் பண்ணிடுங்க என லோகேஷ் கனகராஜ்ஜை கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











