Leo: “உண்மை பணத்தை விட வலிமையானது..” நான் ரெடி பாடல் வரிகள் நீக்கம்... விஜய்யின் லியோவுக்கு செக்!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்க்ரீன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
முன்னதாக விஜய் பிறந்தநாளில் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளான 'நான் ரெடி' பாடல் வெளியானது. இந்தப் பாடலில் சில வரிகள் சர்ச்சையான நிலையில், அதனை நீக்க சென்சார் போர்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

விஜய்யின் லியோவுக்கு முதல் செக் : வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள லியோ அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. விஜய் - லோகேஷ் கூட்டணி மாஸ்டர் படத்துக்குப் பிறகு லியோவில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டிய இக்கூட்டணி, லியோவில் இன்னும் தரமான சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. அனிருத் இசையில் 'நான் ரெடி' என்ற டைட்டிலில் வெளியான இந்தப் பாடல், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேநேரம், இந்தப் பாடல் பல சர்ச்சைகளையும் சந்தித்தது.

சமீப காலங்களாக தனது படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்காமல் இருந்த விஜய், இந்தப் பாடலில் வாயில் சிகரெட்டுடன் டான்ஸ் ஆடியிருந்தார். இதற்கு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதேபோல், 'நான் ரெடி' பாடலில் 'பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டாவ கொண்டா சியர்ஸ் அடிக்க... பத்தவச்சு பொகையவுட்டா பவரு கிக்கு' உள்ளிட்ட சில வரிகளுக்கும் எதிர்ப்பு கிளம்பின.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும், 'நான் ரெடி' பாடலில் இடம்பெற்ற வரிகளுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அரசியல் பிரமுகர் ராஜேஸ்வரி ப்ரியா என்பவர், 'நான் ரெடி' பாடலில் இடம்பெற்றுள்ள சர்ச்சையான வரிகளை நீக்க வேண்டும் என சட்டப் போராட்டம் நடத்தினார். அதற்கு தற்போது நீதி கிடைத்துள்ளது. அதாவது 'நான் ரெடி' பாடலில் உள்ள சர்ச்சையான வரிகளை நீக்க, மத்திய சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், விஜய்யின் புகை பிடிக்கும் காட்சிகளையும் இந்தப் பாடலில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ராஜேஸ்வர் ப்ரியா, "நான் ரெடியா பாடலில் வரிகளை மாற்ற உத்தரவு. நீதி வென்றுவிட்டது. தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி. எனது புகாரை ஏற்று நான் எடுத்துக் கூறிய சமூகத்திற்கு எதிரான பாடல் வரிகள் நீக்கபட்டது. எமது சமூகப் பணியும் சட்டப் போராட்டங்களும் அடுத்த தலைமுறை நலனுக்காக தொடரும். உண்மை பணத்தைவிட வலிமையானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











