Leo FDFS: லியோ 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை... விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தை அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் என படக்குழு நீதிமன்றத்தை நாடியது.
4 மணி ஷோவுக்கு அனுமதி மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 7 மணி காட்சி குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என கூறியிருந்தது.
இந்நிலையில் லியோ 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என தற்போது அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

லியோ 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்தை, லலித் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படம் நாளை முதல் உலகெங்கும் ரிலீஸாகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகவுள்ள லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுமதி கோரியது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில், லியோ சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
அதன்படி, லியோ வெளியாகும் 19ம் தேதி 2 சிறப்புக் காட்சிகளுடன் மொத்தம் 6 ஷோவும், 20 முதல் 24ம் தேதி வரை மொத்தம் 5 காட்சிகளுக்கும் அனுமதி கொடுத்தது. ஆனால், முதல் நாளில் மட்டும் அதிகாலை 4 மணி FDFS காட்சிக்கு அனுமதி வேண்டும் என லியோ படக்குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை.
அதேநேரம், காலை 7 மணி ஷோவுக்கு அனுமதி கொடுப்பது குறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுக்கலாம் என பரிந்துரைத்தது. இதனையடுத்து லியோ தயாரிப்பு நிறுவனம் சார்பில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலாளர் அமுதாவை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இதனால் லியோ 7 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு தற்போது ஏமாற்றமே கிடைத்துள்ளது.

அதாவது லியோ 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான திரையரங்குகளில் காலை 9 மணி காட்சிக்கு டிக்கெட் புக்கிங் ஓபனாகிவிட்டதால், இனி காட்சி நேரத்தை மாற்ற முடியாது என சொல்லப்பட்டுள்ளது. இதே கருத்தை தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருந்தார். இதனால் லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் திரையிடப்படவுள்ளது.
கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் லியோ அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அனுமதி கிடைக்காமல் போனது விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











