Leo - எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்.. உலக அளவில் ஃபேமஸான லியோவின் நா ரெடி பாடல்
சென்னை: Vijay (விஜய்) விஜய் நடித்த லியோ படத்தில் இடம்பெற்ற நா ரெடிதான் பாடல் உலக அளவில் பிரபலமடைந்திருக்கிறது.
விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இதனால் லியோ விமர்சன ரீதியாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய்யும், அவரது ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் விமர்சன ரீதியாக அடி வாங்கியிருக்கிறது. அதேசமயம் வசூலில் லியோ நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் நடிப்பு சூப்பர்: படத்தின் கதையும், திரைக்கதையும் விமர்சனத்தை சந்தித்தாலும் விஜய்யின் நடிப்பை பலரும் கொண்டாடிவருகின்றனர். நடுத்தர வயது தந்தையாக விஜய் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்திலிருந்து விஜய்யை கழித்துவிட்டால் ஒன்றுமே கிடையாது என்று ரசிகர்கள் கூறினர். அவர்களின் கூற்றுக்கேற்றபடிதான் விஜய்யின் நடிப்பும் இருந்தது.
சக்சஸ் மீட்: வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருந்ததால் லியோ படத்தின் சக்சஸ் மீட்டும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டிருந்த சூழலில் சக்சஸ் மீட் நடத்தப்பட்டதால் விஜய் ரசிகர்கள் அவரது குட்டி ஸ்டோரியை எதிர்பார்த்து இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விஜய்யும் ஒரு குட்டி ஸ்டோரியை சொன்னார். மேலும் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார்.
வெளிநாடுகளில் வசூல்: இதற்கிடையே லியோ திரைப்படம் வெளிநாடுகளில் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதன்படி வெளிநாடுகளில் மட்டும் 201 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். உள்நாடு, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் வசூலில் லியோ மாஸ் காண்பித்ததாக தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
அடுத்த உற்சாகம்: தற்போது அவர்களுக்கு அடுத்த உற்சாகம் கொடுக்கும் செய்தி வந்துள்ளது. லியோ படத்தின் பாடல்களிலேயே நா ரெடிதான் பாடல்தான் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. பலமான பாராட்டை பெற்றாலும் வரிகளால் விமர்சனத்தையும் சந்தித்தது அந்தப் பாடல். இந்நிலையில் அந்தப் பாடல் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆகியிருக்கிறது.
அதாவது பிரீமியர் லீக் கால்பந்தில் பிரபல கால்பந்து அணியாக விளங்கும் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் முகநூல் பக்கத்தில், எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ் உருவாத டா நம்ம டூல்ஸ் அத்தன பேரு அசைவும் ஒரே மாதிரி சிங்க்கு என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த பத்தாம் தேதி டாட்டன்ஹாம் அணிக்கும் நியூகேஸ்டில் அணிக்கும் இடையே நடந்த பிரிமீயர் லீக்கில் டாடன்ஹாம் அணி நான்கு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. எனவே அதை கொண்டாடும்வகையில் இந்த வரிகள் அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











