‛லியோ’ படத்தால் சிக்கல்.. மனநல சோதனை கோரிய வழக்கில் லோகேஷ் கனகராஜுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: நடிகர் விஜய் நடித்த ‛லியோ' திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை எதிர்த்தும், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மனநல பரிசோதனை செய்ய கோரியும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்றைய விசாரணையின்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தரப்பில் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னிலையில் உள்ள இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அடுத்து எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தன.

கார்த்திக்கை வைத்து அவர் இயக்கிய கைதி, நடிகர் விஜயுடன் மாஸ்டர், கமல்ஹாசனுடன் விக்ரம், மீண்டும் விஜயுடன் லியோ உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து மாஸ் வெற்றியை பெற்றது. இதனால் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் வலம் வருகிறார்.
இந்நிலையில் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு எதிராக மதுரை ஒத்தகடையை சேர்ந்த ராஜா முருகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பரபரப்பான மனு ஒன்றை தாக்கல் செய்தார். நடிகர் விஜயின் ‛லியோ' திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை குறிப்பிட்டு லோகேஷ் கனகராஜுக்கு மனநல பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ‛‛லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் வன்முறை அதிகமாக உள்ளது. துப்பாக்கி, கத்தி, இரும்பு கம்பிகளுடன் வன்முறையில் ஈடுபடுவது, வீட்டில் துப்பாக்கி தயாரிப்பது போன்ற காட்சிகள் உள்ளன. மதம்சார்ந்த கருத்துகள் உள்ளன. எதிரியை பழிவாங்கவது, பெண்கள், குழந்தைகளை கொல்வது, போதைப்பொருள் பயன்படுத்துவது உள்பட பல காட்சிகள் உள்ளன.
இதுபோன்ற சட்டவிரோத செயல்கள், வாகனங்களில் அதிவேகமாக செல்வது, காவல் துறை உதவியுடன் எந்த வகையான குற்றங்களையும் செய்யலாம் என்பது போன்ற காட்சிகள் மூலம் சமூகத்துக்கு தவறான வழிக்காட்டுதல்களை வழங்கி வருகிறார். இதுபோன்ற திரைப்படங்களை காட்சிகளை தணிக்கை குழு முறையாக பரிசோதிக்க வேண்டும்.அவருக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். லோகேஷ் கனகராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்ய வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்நிலையில் தான் இன்று மீண்டும் இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அப்போது நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு, ‛‛லியோ திரைப்படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளது'' என்பது பற்றி பதிலளிக்க லோகேஷ் கனகராஜ் தரப்புக்கு அதிரடியாக உத்தரவிட்டது. அதன்பிறகு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











